ஆக்கம் : கலாபூஷணம்.எம்.எச்.ஏ.அப்துல் ஹலீம்

நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வரும் போது கடகக் கோட்டிற்கும் , மகரக் கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியே சூரிய உச்சத்தைப் பெறுகிறது. ஆகவே இப்பகுதி வெப்ப வலயம் எனப்படும்.

நமது நாடான இலங்கைத் தீவு இவ்வெப்ப வலயத்தின் மத்தியில் இருக்கின்றது. வெப்ப வலயத்தின் ஆவியாக்கம் தொடர்ந்து நடைபெறுவதால் இங்கு உகைப்பு மழை ஒரு பொது இயல்பாகும். இம்மழையை மாலை வேலையில் இப்பகுதியில் தொடர்ந்து எதிர்பார்க்கலாம். அத்துடன் சூரிய உச்சம் வடக்குத் தெற்காக நகரும் போது அதற்கேற்ப பருவப் பெயர்ச்சி மழை பெய்கின்றது. சூரியன் கடகத்தில் உச்சங் கொடுக்கும் போது தென்மெற்காக வீசும் கற்று அதிக மழையை பெய்விக்கின்றது.

எமது நாடு மத்தியில் மலைப் பிரதேசமாக இருப்பதால் வீசுங்க் காற்றுக்கள் மலைகளாற் தடுக்கப்படுகின்றன. தென்மேல் பருவக் காற்றால் மலை நாட்டின் காற்று முகப்புப் பகுதியும், தென்மேல் தாழ் நிலமும் அதிக மழையைப் பெறுகின்றன. வடகீழ் பருவக் காற்றால் வறண்ட வற்ண்ட மழை நாடு எனப்படும் ஊவாவும், வடக்கு, வடமத்தி, கிழக்கு மாகாணங்களும் அதிக மழையைப் பெருகின்றன. நாம் இம்மழை பெய்யும் காலத்தை “மாரி காலம்” என்கிறோம்.

இது பெரும்பாலும் ஒக்டோபர் மாத நடுப் பகுதியிலிருந்து , ஜனவரி மாத நடுப் பகுதி வரை நீடிக்கும்.

சுமார் அரை நூற்றண்டிற்கு முன்னர் மாரி மழை தொடங்கினால் ஓயாமல் பெய்து கொண்டேயிருக்கும். குளங்கள் நிரம்பி வான் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும். வயல் நிலங்கள் பள்ளப் பகுதிகள் நீரால் மூடுண்டிருக்கும்.குடிசைகள், தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் பள்ளிக்கூடங்கள் , பள்ளிவாசல்களில் வந்து அகதிகளாகக் கரையேறி வந்து நீர் வடிந்ததும் மீண்டும் தத்தம் இடங்களுக்குச் செல்வது வாடிக்கையாகி இருந்து வந்தது.

ஏறாவூர் வாவிக்கரை கிராம கோட் வீதிக்கு வந்து விடும். மீன் பிடிப்படகுகள் , தோணிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். மட்டு நகர் முகத்துவாரம் சில நாட்கள் செல்ல நீர் முழுவதும் கடலை நோக்கிச் சென்றதும் நிலமை இயல்பு நிலைக்கு வந்து விடும். இது வருடாந்தம் நடைபெறும் இயற்கை நிகழ்வாகவே இருந்து வந்தது.

1957 இலும் வழமை போல் மாரி மழை ஓயாது பெய்து கொண்டிருந்தது. உறுகாமக் குளம், உன்னிச்சைக் குளம் போன்ற பெரிய குளங்களும், நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தது. வான் கதவுகள் திறக்கப்பட்ட நீரும், வான் மழை நீரும் வயல்வெளிகளிலும் , பள்ள நிலங்கலிலும் நிரம்பின. பள்ள நிலங்களிலும் , குடிசைகளிலும் வாழ்ந்த மக்கள் இரவோடு இரவாக உயர் பகுதிகளுக்கு கரையேரினர்.

இரவு நடு நிசியில் “குய்யோ முறையோ” வென ஊரே கொதி கொண்டது. திடீரென ஊருக்குள் நீர் பரவத் தொடங்கியது. அக்காலத்தில் மாடி வீடுகள் எதுவும் ஊரில் இல்லை. களிமண் வீடுகளே பெரும்பாலும் காணப்பட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய சில கல் வீடுகளே காணப்பட்டன. அந்த வீடுகளையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை. கைக் குழந்தைகளை மட்டும் தோளில் போட்டுக் கொண்டு மக்கள் பள்ளிவாசல்களையும், பள்ளிக்கூடங்களையும் நோக்கி ஓடினர்.சில கல் வீடுகளில் முழங்கால் அளவு நீரும், இடுப்பளவு நீரும் காணப்பட்டன.கட்டில்களின் மீதும் , மேசைகளின் மீதும் மக்கள் ஏறி இருந்து கொண்டனர்.

பிரதான வீதியால் நாலடிக்குமேல் வெள்ளம் பரவியது. மோட்டார் வாகனங்கள் ஓடிய பிரதான வீதி , காதியார் வீதி, முகாந்திரம் வீதிகளில் தோணிகளும் , வள்ளங்களும் ஓடின.

கூட்டுறவுக் கடைகள், சில்லரைக் கடைகள் யாவும் திறந்து விடப்பட்டன. அங்குள்ள அரிசி , மாவு, சீனிப் பாவனைப் பொருட்களை மக்கள் அவசர அவசரமாக அள்ளி அள்ளிச் சென்றனர். உயரமான இடங்களில் பெரல்களை வைத்து அவற்றின் மேல் தகரத்தை வைத்து கிடைத்த உணவை சமைத்து உண்டனர்.

பஸாரில் இருந்த சில புடவைக் கடைகளில் சில மாடிக்கடைகள் இருந்தன. அவற்றுள் மக்கள் புகுந்தனர். பெரிய குளங்கலுள் ஒன்றான உறுகாமக் குளத்தில் அருகில் நின்ற மரமொன்ரின் வேர் உள் நுழைந்து காற்றுக்கு மரம் அசைய , மரத்தி வேரும் அசைந்து அணைக்கட்டில் வெடிப்பும் ஏற்பட்டது. அதனூடாக நீர் கசிந்து இறுதியில் அணைக்கட்டே வெடித்து நீர் அபரிமிதமாக வெளியேரியது இதனால் எமதூரவர்களின் வாழ்வாதாரமான பொருளாதார வளங்கள் முற்றாகச் சேதமடைந்தது. தோட்டம் துரவுகள், சேனைச் செய்ககைகள் , கால் நடைகள் பட்டிகள் யாவும் அழிந்தன. காகிதங்கள் நீரில் மிதந்து செல்வது போல் ஏராளமான ஆடு, மாடுகள் நீரால் அள்ளுண்டு போயின.

மக்களுக்கு உதவக் கூடிய சமூக சேவை இயக்கங்கள் , தன்னார்வ அமைப்புக்கள் அக்காலத்தில் மிகக் குறைவு. DRO செயலகமும், காவல் துறையினரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியும், உணவுப் பொதிகள் , உலர் உணவு வகைகளைக் கொடுத்தும் ஓரளவு உதவி செய்தனர்.

ஏராளமான களிமண் சுவர்களினால் ஆன வீடுகள் நீரோடு கரைந்து பூயின. முற்றாகச் சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 80/- உம் அரை குறையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 40/- உம் நிவாரணமாகக் அரசாங்கத்தினால் கொடுப்பட்டது.

சில தினங்கள் கழித்து பேருவலை, கொழும்பு,YMMA போன்ற வெளியூர் மக்களின் உணவு உடை முதலிய பொருட்கள் லொரிகளில் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டது.

மாரி காலம் வந்தால் சிறு சிறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவது வழக்கம். எனினும் 1957 இல் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கு மாபெரும் இழப்புக்களை ஏற்படுத்திய ஒரு பெரும் அனர்த்தமாகும்.

Related Posts