மர்ஹூம்  யூ. வீ. மீராலெப்பை (முன்னால் பட்டின சபைத் தலைவர்) அவர்களுக்கும் பலாங்கொடையைச் சேர்ந்த மர்ஹூம் சுவாரியத்தும்மா அவர்களுக்கும் மகனாக 1940.04.18 இல்  பிறந்தார்.

இவர், தனது இளமைக் கல்வியை ஏறாவூர் மைனர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும், அதன் பின்னர் எட்டாம் வகுப்பு வரை மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் பின்னர் பதுளை ஊவாக் கல்லூரியிலும் அதன் பின்னர் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியிலும் பயின்ற பின்னர் மருத்துவக் கல்விக்காக இந்தியாவின் கல்கொத்தா நகருக்குச் சென்று மருத்துவ பட்டத்துடன் நாடு திரும்பிய இவர் தன்னை அரசியலில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1965 தொடக்கம் 1967 வரை ஏறாவூர் பட்டினசபையின் தலைவராக பதவி வகித்த இவர் 1977 இல் நடந்த பொதுதேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேற்பாளராக போட்டியிட்டு மட்டகளப்பு தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

அன்றைய ஜனாதிபதி திரு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களால் டாக்டர் அஹமத் பரீட் மீராலெப்பை அவர்கள் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சராக நியமித்து கௌரவிக்கப்பட்டார்கள்.

முதன் முதலில் பிரதியமைச்சர் அந்தஸ்த்தைப் பெற்ற ஏறாவூர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டவர் டாக்டர் அஹமத் பரீட் மீராலெப்பை அவர்களே.

சேவைகள்:-

*முன்னாள் ஈராக் தலைவர் சதாம் ஹுஸைன் அவர்களிடம் வைத்த கோரிக்கைகமைவாக ஏறாவூரில் “சதாம் ஹுஸைன்” கிராமமும் காத்தாங்குடியில் “கர்பலா” கிராமமும் அமைக்கப்பட்டன.

*மிச்நகர் கிராமம், றூகம் கிராமம் மற்றும் காத்தாங்குடியில் பரீட் நகரும் இவரது முயற்சியின் பயனாக குடியேற்ற கிராமங்களாக கிடைத்தன.

*அரச உத்தியோகம் புரியும் முஸ்லிம் பெண்களுக்கு கணவனை இழந்தால் “இத்தா” கடமையை அனுஷ்டிப்பதற்காக பாராளுமன்றத்தில் “அல் குர்ஆன்” வசனங்களை ஓதிக்காண்பித்து சட்ட ரீதியாக பெற்றுக்கொடுத்தவர்.

*ஏறாவூர் அஹமத் பரீட் விளையாட்டரங்கு, அஹமத் பரீட் வித்தியாலயம்,நெசவு நிலையம், ஏராவூர் பட்டினசபை புனரமைப்பு மற்றும் புதிய வீதிகள் என்பன இவரது சேவையின் சின்னங்களாகும்.

நீண்ட காலங்கள் சுகயீனமுற்றிருந்த இவர்கள் 1985.09.10 அன்று சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டும் மறைந்தார்.

ஜனாஷா ஏறாவூர் ஆற்றங்கரை பள்ளிவாயலுக்கருகிலுள்ள அன்னாரது குடும்ப மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மர்ஹூம் பரீட் மீராலெப்பை அவர்கள் பற்றி அல்ஹாஜ் மன்சூர் ஆசிரியர் அவர்கள்.

ஏறாவூரின் வரலாற்றில் பரீட் மீரா லெப்பை அவர்களினுடைய குடும்ப வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அவர்கள் ஒரு தனித்துவமான செல்வாக்கு மிக்க , செல்வ வளமிக்க பரம்பரையாகும். அந்த பரம்பரைக்கு ஏறாவூர் மக்கள் கட்டுப்பட்ட ஒரு சூழல் காணப்பட்டது.

யாரும், அவர்களை எதிர்த்தோ, அவர்களுக்கு மாறாகவோ, எந்த ஒரு விடயமும் நடக்கமாட்டாது. ஆரம்பத்தில் ஏறாவூரின் தலைமைத்துவத்தை பொறுப்பு எடுக்க படித்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் பரீட் மீராலெப்பையின் குடும்பத்தில் உள்ளவர்களே சற்று கல்வித்துறையில் உயர்வாக இருந்தார்கள்.

அவர்கள் பெரும்பாலும் அக்காலத்திலே மட்டக்களப்புக்குச் சென்று ஆங்கிலக் கல்வியை தேடிப் பெறும் ஆற்றல் உள்ளவர்களாக இருந்தனர்.

இதனால் எலிசபத் மகாராணி  5 பேருக்கு இலைகையில் “ முஹாந்திரம்” என்ற பட்டம் வழங்கிய போது பரீட் மீராலெப்பையின் தந்தை மீராலெப்பை வலியுள்ளாஹ் அவர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தார்கள். காரணம், அவர்களது ஆங்கில அறிவும் , ஊரில் அவர்கள் பெற்ற செல்வாக்குமே. இதனால் ஒரே காலத்தில் பட்டின சபை பொறுப்பையும், பள்ளிவாயல்கள் (ஓட்டுப்பள்ளி, ஆற்றங்கரைப் பள்ளி, காட்டுப்பள்ளி) ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் வகித்தார்கள்.

1954 இல் இவர் கால்ஞசென்றவுடன் யூ.வீ.எம். சரீப் (மீராலெப்பை வலியுள்ளாஹ் அவர்களின் சகோதரர்) அப்பொறுப்பை பாரமெடுத்தார்., காட்டுப்பள்ளியின் பொறுப்பு சிலரது செயற்பாடுகளால் கைமாற்றப்பட்டது. இன்னிலையில் ஓட்டுப்பள்ளியும், ஆற்றங்கரைப்பள்ளியுமே யூ.வீ.எம். சரீப் அவர்கள் வசம் இருந்தது.

இன்னிலையின் ஏறாவூரில் ஒருவித புரட்சி ஏற்பட்டது.அதில் முக்கியமாக உலமாக்கள் முன்னுக்கு வந்தனர். அதில் ஏ.எல்.எம். இஸ்மாயில் ஆலிம் அவர்கள் பாகிஸ்தான் ஜின்னாவின் புரட்சியில் கவரப்பட்டதனால் ஏறாவூரில் ஜின்னா வாசிக சாலையினையும் உருவாக்கினார். அந்த வாசிகசாலை பின்னர் பட்டின சபையோடு இணைக்கப்பட்டு பொது நூலகமாக்கப்பட்டது.

பின்னர் தேசமான்ய வை.எம்.சீ.ஏ. றகுமான் மாஸ்டர் தலைமையில் ஒரு அணி உருவாகி காதியார் இஸ்மாயில் ஆலிம் போன்றவர்கள் ஊரில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். அதில் புரட்சிக்கமால், எம்.எம்.சாலி, உமர் சக்காப் மௌலானா, யூ.எல்.தாவூத் சேர், எஸ்.எல்.அப்துல் காதர் JP  போன்றோர் ஊரில் மாற்றத்தை வேண்டி நின்றனர். அந்த நேரத்தில் ஆலிம்கள் , ஆசிரியர்கள், ஓரணியாகவும் , பரீட் மீராலெப்பையின் ஆதரவாளர்கள் ஓரணியாகவும் பிரிந்து நின்றனர். இது தொடர்பாக றகுமான் மாஸ்டர் தலைமையில் காதியார் வீதியிலுள்ள ஷாவியா பள்ளிவாயலில் ஒரு கூட்டமும், அந்தக்கூட்டத்தில் உமர் சக்காப் மௌலானா “ இதா ஜா அ நஸ்ருல்லாஹி” என்ற சூராவை கிரா அத்தாக ஓதினார்.

ஈரணியாக காணப்பட்ட ஊரின் நிலையில் யூ.வீ.எம்.சரீப் அவர்களின் அணியில் ஓட்டுப்பள்ளி வளாகத்தில் போடிமார்கலான முஹம்மது காசிம் ( நிம்புறிசியர்) , சினா மானா ஹாஜியார், தெல்லு உசனார் அப்பா, சானா குனா, சீனி முஹம்மது பரிகாரியார் போன்றோரும்,, றகுமான் மாஸ்டர் அணியில் படித்த மட்டத்திலுள்ளவர்களும் இருந்தனர்.

இத்தகைய இரு துருவப் பிரச்சினையை வக்பு சபைக்கு கொண்டு சென்ற போது இரு பள்ளிவாயலுக்கும், தனித்தனி நிருவாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இம்முறைப்பாட்டை ஏற்ற வக்பு சபை நேரடியாக வருகை தந்து ஏறாவூர் பொதுச் சந்தையில் கூட்டத்தை நடாத்தியபோது புரட்சிக்கமால் சாலி அவர்கள் அதிகமான கருத்துக்களைக்கூறி பள்ளிவாயல் நிருவாகம் ஏன் மாற்றப் படவேண்டுமென தெளிவுபடுத்தினார். இதில் வை.எம்.எம்.ஏ. காதர் மாஸ்டர், அப்துல் காதர் JP,  முஹைதீன் மௌலவி , உமர் சக்காப் மௌலானா போன்றோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதில் நிருவாகத் தெரிவு தொடர்பாக  தனித்தனியாக தற்காலிக சபைகளை அமைப்பது தொடர்பான தீர்மானத்திற்கு வந்தனர். இதில் தனித்தனியாக இரு பள்ளிகளுக்கும் நிருவாகம் அமைக்கப்பட்டது. இதில் ஆற்றங்கரைப் பள்ளிக்கு தலைவராக றகுமான் மாஸ்டர் அவர்களும், செயலாளராக யூ.எல்.தாவூத் மாஸ்டர் அவர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நிருவாகத்தை பொறுப்பெடுத்ததில் இருந்து யூசுப் மோதினார் , ஆற்றங்கரைக்காரர் போன்ற முக்கிய முஅத்தின் மார்கள் விலகிக்கொண்டனர்.

இந்த நேரத்தில் பள்ளிவாயல் இமாமாக ஆலிம் தம்பி என்பவரும், ஓட்டுப்பள்ளிக்கு மீராசாஹிப் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இங்கு “குத்பா” தமிழ் மொழியால் அல்லது அரபுத் தழிழாகவே வாசிப்பதாகக் காணப்பட்டது. பின்னர் நிருவாகம் மாற்றப்பட்டபோது 11 பேரைக்கொண்ட ஒரு நிருவாகம் அமைந்தது. இந்த நிருவாகத்தில் SLM.அப்துல் காதர் JP, ஸாஹிர் மௌலானா, யூ.எல். தாவூத் மாஸ்டர் போரவர்கள் இணைந்து இரு பள்ளிவாயல்களையும் நிருவாகம் செய்தனர். அதிலும் இடைக்கிடையில் குழப்பங்கள் ஏறபட்டது.

ஓட்டுப்பள்ளியில் நிருவாகத்தில் குழப்பகரமான நிலை தோறியது. இதனால் அங்கிருந்த நிம்புரிஸியர், சீனா மானா, உசன் அப்பா போன்ரோர்தான் இந்த குழப்பத்தை தோற்றுவித்திருந்தனர். இதில் அதிலிருந்த ஒருவர் றஹ்மான் மாஸ்டரை, தான் சுடப்போவதாகக்கூறி தன்னுடைய வீடிலிருந்த துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு நடுக்கத்தில் நின்றதாகக் கூறபடுகின்றது. சிலரின் கோரிக்கைகளின் பின்னரே கையிலிருந்த துப்பாக்கியை கீழே வைத்திருக்கிறார். பின்னர் கூட்டமும் கலைந்தது.

புஹாரி மஜ்லிஸ் சிறப்பாக இடம்பெற்றதோடு ஜும்மாக்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு பள்ளிக்கென்ற தீர்மானமும் இந்த கால கட்டத்திலே முன்வைக்கப்பட்டு அமுலாக்கப்பட்டது. புஹாரி மஜ்லிஸுக்குப் பின்னர் ஸமது மௌலவி , இப்ராஹிம் மௌலவி, முஹைதீன் மௌலவி போன்றோர் பயான் நிகழ்த்தி வந்தனர். பின்னர் அரசியல் அழுத்தங்கள் நிருவாகத்தில் தலை தூக்கியதால் பாரிய குழப்பத்தின் காரணமாக இரு நிருவாகங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது.

பின்னர், ஆற்றங்கரைப் பள்ளி நிருவாகத்தில் ஸ்டோர் கீபர் காதர், ச.கு , ஓவிஸர், கஃபூர் போன்றோரும் நிருவாகத்தில் காணப்பட்டனர்.

மறைந்த பிரதியமைச்சர் பரீட் மீரலெப்பை அவர்கள் பற்றி முன்னால் பிரதியமைச்சர் அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்கள்.

மறைந்த பிரதியமைச்சர் பரீட் மீரா லெப்பை அவர்கள் ஒரு நாள் ஏறாவூரிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் ஓட்டமாவடிப் பெரிய மஸ்ஜிதில் மழை வேண்டி தொழுவதாக அறிந்து மஸ்ஜிதுக்கு தொழுகையில் பங்கெடுக்கச் சென்றார்கள். தொழுகை முடிந்ததும் தொழ வந்த எவரிடமும் குடை இருக்கவில்லை. “மழை வேண்டித் தொழுதால் மழை நிச்சயமாகப் பெய்யும் என்ற நம்பிக்கை  (ஈமான்) இருக்கவேண்டும். இருந்திருந்தால் குடை கொணர்ந்திருப்பீர்கள், எவரின் கையிலும் குடையைக் காணோமே! ஈமானில்லாத வழிபாடுகளோ, பிரார்த்தனையோ நிறைவேற மாட்டாது”  என்று தொழுதவர்களிடம் கூறிவிட்டு ஜீப்பில் ஏறிச்சென்று விட்டார் பரீட் எம்.பி.

புகைப்படத் தொகுப்புக்கள்

Related Posts