ஆக்கம் : முமு. அப்துல் வாஜித் – ஏறாவூர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

1990.08.12 அன்றைய தினம் இடம்பெற்ற வன்செயல்

1990 காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பான பதிவொன்றை வழங்குமாறு சகோதரர் முஹம்மத் முஹைதீன் அப்துல் வாஜித் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கமைவாக அவர் எமக்களித்த “90 இன் குருதி 🩸” என்ற தலைப்பிலான முழுப்பதிவினை எதிர்கால சந்ததியினருக்கு ஆவணப்படுத்தும் நோக்கில் இச் செயலியினூடாக வெளியிடுகிறோம். இதனுடைய உள்ளடக்கங்கள் மற்றும் குறை, நிறைகள் அனைத்தும் அவரையே சாரும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

தொண்ணூறின் (90) குருதி

1990ஆம் ஆண்டு வன்செயல் தொடர்பான பதிவினை நான் இங்கு பதிவுசெய்ய முயல்கிறேன். இப்பதிவு அச்சமகாலத்தில் நான் பார்த்த, கேட்ட தகவல்களின் அடிப்படையிலும், இன்னும் நம்பிக்கையான மனிதர்களின் வாக்கு மூலங்களின் அடிப்படையிலும் இதனை பதிவு செய்கின்றேன். இங்கே பதிவு செய்யப்படுகின்ற விடயங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் இருக்கலாம், இதில் விவாதத்திற்குரிய அல்லது சர்ச்சைக்குரிய விடயங்கள் இருப்பின் அதனை ஆதாரத்துடன் தெரிவித்து நீங்கள் திருத்திக்கொள்ள முடியும் என்பதனையும் தெரிவித்துக்கொண்டு இப்பதிவினை பதிவு செய்கிறேன்.

உண்மையில் 1990 ஆம் ஆண்டு படுகொலை என்ற விடயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போருடன் தொடர்ச்சியாக நடந்தேறிய விடயமாகும். இரண்டாம் கட்ட ஈழப்போர் என்பது 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போது இருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு சமாதான ஒப்பந்த பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தது. அந்த காலப்பகுதியில் இந்திய இராணுவமும் 1987இல் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்கே நிலை கொண்டிருந்தது. புலிகளுக்கும் அரசாங்கதிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து இந்திய இராணுவம் வெளியேறி இருந்த நிலையில் இவர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை தொடர்ந்து வந்து 1990 ஆம் ஆண்டு, எனது ஞாபகத்திற்க்கு எட்டிய வகையில் ஜூன் 1990 வரையில் இப்பேச்சு வார்த்தை நீடித்தது. ஒரே நாளில் திடீரெனெ விடுதலைப்புலிகள் அப்பேச்சு வார்த்தையை முறித்துக்கொண்டு இலங்கை அரச படைகள் மற்றும் பொலிஸார் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடாத்தினார்கள். இதன் மூலம் அந்த பிரேமதாசா – புலிகள் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து புலிகளினால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள், இராணுவத்திற்கும், இவர்களுக்குமிடையிலான மோதல்கள் அதில் அவர்களது இராணுவ உத்தியாக முஸ்லிம்களை பலிவாங்குகின்ற அல்லது அச்சுறுத்தி வெளியேற்றுகின்ற உத்திகளும் ஆங்காங்கே இடம்பெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான் 1990 ஏறாவூர் படுகொலையும் இடம்பெற்றது. அந்த இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்குவதற்க்கு முன்னர் எமது ஏறாவூரில் எப்படியான சூழல் நிலவியது என்பதை இவ்விடத்தில் ஞாபகமூட்டுவது பொருத்தமாதாக இருக்குமென நினைக்கிறேன்.

உண்மையில் 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் முக்கியமான கலவரமாகும். அக்கலவரத்திற்கு முந்தைய காலப்பகுதியில் முஸ்லிம்களில் ஒரு பிரிவினரில் கணிசமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவானவர்களாகவே இருந்தார்கள். 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தினை தொடந்து ஏறாவூரை அண்டிய கிராமங்களில் வசித்து வந்த முஸ்லிம்கள் அங்கு குடியிருக்க அல்லது வாழ முடியாத நிலை ஏற்பட்டது. அக்கிராமங்களில் வசித்த முஸ்லிம்கள் அக்கிராமங்களிலிருந்து வெளியேறி அக்கறைப்பற்று, காத்தான்குடி , பாலமுனை, ஏறாவூர் போன்ற இடங்களில் குடியேறினர். றூகம் (உறுகாமம்) என்ற கிராமம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

இந்த கலவரத்தின் பின் ஏற்பட்ட அதிருப்தியின் காராணமாக முஸ்லிம்கள் மத்தியில் அவர்களது போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்த மன நிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கெதிரான மன நிலை இருந்ததாகத்தான் சொல்ல வேண்டும். ஆகையினால் 1985 காலப்பகுதிக்கு முன்னர் ஒரு சில முஸ்லிம்கள் தமிழர் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து இருந்தார்கள், ஆனால் 1985 இனக்கலவரங்களுக்கு பின்பு அவர்கள் இணைவது முற்றாக நின்றிருந்தது. அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு ஏறாவூரிலிருந்து நான்கு பேர் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். இவர்கள் தமிழீழ விடுதப்புலிகளுடன் முறையாக இணைந்த முதலாவது நபர்கள் இந்த நான்கு பேருமாவார்கள். இவர்கள் சேர்ந்த காலப்பகுதியைத் தொடர்ந்து இலங்கை, இந்திய ஒப்பந்தங்கள் அமுலுக்கு வருகின்றது. இவர்களும் இந்த இயக்கத்த விட்டு வெயேறியிருந்தார்கள்.

பின்னர் , பிரேமதாஸ – புலிகள் ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து புலிகள் பாரியளவில் முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று அரசியல் கூட்டங்களை நடாத்தி முஸ்லிம்களை அவர்களது இயக்கதிற்கு ஆட்சேர்ப்பு செய்கின்ற பணியினை பாரியளவில் முன்னடுத்தார்கள். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் அவர்களது இயக்கத்தில் சேர்ந்தார்கள்.

குறிப்பாக , எமதூரை பொறுத்தமட்டில் அப்போதிருந்த அரசியல் நிலவரத்தையும் இங்கே சுட்டியே ஆகவேண்டும். அப்போது இரண்டு அரசியல் முகாம்கள் இருந்தன.

1- முஸ்லிம் தேசியவாத சித்தாந்தத்துடன் தொடர்புபட்டது

2- பெரும் தேசிய கட்சியுடன் தொடர்புபட்டது.

1989 இல் நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலிலே , முஸ்லிம் தேசிய வாதத்துடன் தொடர்புபட்ட அரசியல் கட்சியிலிருந்து ஒரு பிரதிநிதி தெரிவுசெய்யப்பட்டார். அவர் காத்தான்குடியிலிருந்து தெரிவானவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக எமதூரிலிருந்து ஒரு அரசியல் பிரமுகர் போட்டியிட்டு அவரால் வெல்ல முடியவில்லை. இந்த புலிகளின் பிரச்சாரங்களை தொடர்ந்து வெகுவாக இந்த அரசியல் பிரமுகரின் ஆதாரவாளர்களே முதலில் புலிகளுடன் இணைந்தார்கள்.

அதன் பின்னர் புலிகளின் பிரச்சாரம் விரிவு படுத்தப்பட்டு கிராமம் கிராமமாக சென்று மேலும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை அவர்களது இயக்கத்திலே இணைத்துக்கொண்டனர். இதே காலப்பகுதியில் பல முஸ்லிம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி இருந்தார்கள். ஏற்கனவே குறிப்பிட்டதன் படி எமது மக்கள் பெரும்பாலும் விவசாயத்தினை நம்பியிருந்தவர்கள், 1985 ஆம் ஆண்டு இனக்கலவரத்தினை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக எமது மக்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டிருந்தது.

இச்சூழ்நிலையில் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் படித்துவிட்டு வேலையற்று இருந்த இளைஞர்கள் அரசாங்கத்தின் பொலிஸ் சேவையில் இணைந்து செயலாற்ற ஆர்வம் காட்டினார்கள். அப்போது இருந்த சூழ்நிலையில் அதுதான் அவர்களுக்கு தனது குடும்பத்தை பசி, பட்டினியிலுருந்து காப்பாற்றுவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. இதனடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் பெருவாரியான முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திருந்தார்கள்.

இவ்வாறான சூழ் நிலையில்தான் பிரேமதாஸ – புலிகள் ஒப்பந்தப் பேர்ச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அராசாங்கத்திற்க்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தார்கள். இந்நிபந்தனைகள் பல பல்வேறு விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தன. அதில் எமது முஸ்லிம்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிபந்தனையை மட்டும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

அந்த அடிப்படையில் அவர்களின் நிபந்தனைகளில் ஒரு பகுதியாக இங்குள்ள இராணுவ முகாம்களில் இருக்கின்ற இராணுவத்தினரோ அல்லது பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸாரோ அவர்களுடைய முகாம்களிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் விடுதலைப் புலிகளின் முன் அனுமதி பெறப்படல் வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருந்தார்கள். அதற்கு அரசாங்கம் இணங்கியிருந்தது.

இந்த அடிப்படையில் இராணுவத்தினரும் , பொலிஸாரும் தங்களது முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த நிலையில் ஏறக்குறைய விடுதலைப் புலிகள் மிகவும் சுதந்திரமாக நடமாடுகின்ற ஒரு நிலைதான் அப்போதிருந்தது. இச்சூழ் நிலையில்தான் விடுதலைப் புலிகள் முஸ்லிம் பகுதிகளில் ஆட்சேர்ப்பு பணியினை முடுக்கிவிட்டிருந்தனர். மாத்திரமல்லாது அச்சுறுத்தி கப்பம் பெறுகின்ற செயல்களிலும் பாரியளவில் ஈடுபட்டனர். இவர்களது அனுமதியின்றி முகாம்களிலிருந்து வெளியாகிய பாதுகாப்பு படையினரை தாக்கிய சம்பங்களும் ஆங்காங்காங்கே பதிவாகியும் இருந்தன.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாலை நேரத்தில் இங்குள்ள உணவகத்தில் கொத்து ரொட்டி சாப்பிட சென்றதற்காக அங்கிருந்த விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்டு கொத்து ரொட்டி தயாரிக்கும் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகுக்கட்டையினால் தாக்கப்பட்ட சம்பங்களும் இருக்கின்றன. இங்கு இதனை குறிப்பிடுவதற்கான கரணம் அந்தளவுக்கு விடுதலைப் புலிகள் சுதந்திரமாக இயங்கினாரகள் என்பதனை குறிப்பிடுவதற்காகவே .

1990 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் (ஜூன்) விடுதலைப் புலிகள் பிரேமதாஸவோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தினை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட நிலையில் அன்று காலை 10 அல்லது 11 மணியளவில் நான் இங்கு எங்களது கடையில் வீற்றிருந்த நேரம் (ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அல் முனீறா வித்தியாலதிற்க்கு அருகில்) ஏறாவூர் பொலிஸ் நிலையம் எனது கண்ணுக்கெட்டிய தூரதில்தான் இருந்தது. அப்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை திடீரென வாகனங்களில் கொண்டுவந்து இறக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்தனர். இதனை அவதானித்த ஏறாவூர் பிரதான வீதியில் வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை அவசர அவசரமாக மூடிவிட்டு அங்கிருந்து துரிதமாக வெளியேறிக்கொண்டிருந்தனர்.

நான் அப்போது க.பொ.த சாதரண தரம் எழுதிவிட்டு இருந்த தருணம் அது. அலிகார் பாடசாலையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்ததினால் மாணவ, மாணவியரும் பாடசாலையிலிருந்து  அவசரமாக வெளியேறி அல்லோல கல்லோலப் பட்டு தங்களது வீடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். இவ்வறானதொரு நிலமையில்தான் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலிருந்த பொலிஸாரும் தங்களது இரு கைகளையும் உயர்த்தியவாறு விடுதலைப் புலிகளிடம் நிராயுதபாணிகளாய் சரணடைந்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு சரணடைந்தவர்களை விடுதலைப் புலிகள் அவர்களது இடங்களுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்து பொலிஸாருடைய ஆயுதங்களை அவர்கள் ட்ரக் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள்.

இவ்வாறு வட கிழக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் விடுதலைப்புலிகளால் முற்றுகையிடப்பட்டு பொலிஸாரின் எதுவிதமான எதிர்தாக்குதலும் இன்றி பொலிஸார் சரணடைந்தவாறுதான் விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்ததினை முடிவுக்கு கொண்டுவருகின்ற முன்னெடுப்புக்கள் சென்று கொண்டிருந்தன.

நானறிந்த வகையில் பொலிஸாருக்கு கொழும்பு மட்டத்திலிருந்து “விடுதலைப்புலிகளுக்கு எதிராக எதுவிதமான எதிர்த்தாக்குதலும் நடாத்த வேண்டாம்” என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாகவே பொலிஸார் சரணடைந்தனர் என்பதாகவே அப்போது சொல்லப்பட்டிருந்தது.

புற நடையாக ஒரே ஒரு சம்பவம் களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி பொலிஸார் மாத்திரம் தான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எதிர்தாக்குதல் நடாத்தியிருந்தார்கள்.

இதுவே இரண்டாம் கட்ட ஈழப்போரின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. களுவாஞ்சிக்குடி பொலிஸாரை விடுதலைப் புலிகள் கைது செய்ய எடுத்த முன்னெடுப்புக்கள் விடுதலைப் புலிகளுக்கான  எதிர்தாக்குதலே இதனுடைய திருப்பு முனையாக அமைந்தது. களுவாஞ்சிக்குடி பொலிஸார் எதிர்தாக்குதல் நடாத்துவத்ற்கு காரணமும் இருந்தது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில்தான் இராணுவ முகாமும் இருந்தது. அப்போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஏறாவூரைச் சேர்ந்த்த எமது சில சகோதரர்களும் அங்கு கடமையாற்றிக்கொண்டிருந்தார்கள். அங்கு பணிபுரிந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் தகவலின் அடிப்படையில் அன்று அதிகாலையில் திடீரெனெ வந்து பாதுகாப்பு அரண்களை அமைக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதன் காரணமாக “விடுதலைப் புலிகள் தங்கள் மீது தாக்குதல் நடாத்த ஆயத்தமாகிறார்கள்” என்பதனை   களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அதே நேரம் இத்தகவலை பொலிஸார் கொழும்பு மேலிடத்துக்கு அறிவித்துக்கொண்டிருந்த போது மேலிடத்திலிருந்து இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது யாரும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எதிர்த்தாகுதல் நடாத்தக்கூடாது என்றும், சரணடைந்து விடுங்கள் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அதேநேரம் மட்டக்களப்பிலுள்ள பொலிஸ் நிலயங்களில் இருந்த பொலிஸாரும் சரணடைந்து விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்ட தகவலும் தொலைத் தொடர்பு சாதனங்கள் வழியாக இவர்களுக்கு கிடைத்திருந்தது. எனவே களுவாஞ்சிக்குடி பொலிஸார் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். தாம் சரணடைவதில்லை , விடுதலைப் புலிகளுக்கு எதிராக எதிர்தாக்குதல் நடாத்த முடிவு செய்ததோடு அவர்கள் தாக்குதலையும் மேற்கொண்டிருந்தார்கள்.

இந்த தாக்குதல், இரண்டாம் கட்ட ஈழப்போரின் முதல் துப்பாக்கி வேட்டு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தான் முதல் வேட்டு தீர்க்கப்பட்டது. இந்த முதல் வேட்டு தீர்க்கப்பட்டதில் காயமடைந்த புலி உறுப்பினரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்தான்.அவ்ருடைய பெயர் ஹஸன். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஏறாவூரின் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் ஆத்ரவாளராக இருந்தவர்.முதன் முதலில் அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகாயமடைந்திருந்தார். இதனைத்தொடர்ந்து இரு பக்கமும் தீவிரமாக தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.ஒரு கட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் நின்று பிடிக்க முடியாத சூழல் அதன் காரணமாக பொலிஸார் சரணடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போதைய காலகட்டத்தில் பொலிஸாருக்கு பெரும்பாலும் ஒரு அடிப்படையிலான ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டாலும் கூட, முறையான யுத்த தந்திரோபாயங்கள் மற்றும் நேரடி யுத்தங்களில் பங்குகொள்ளாமை போன்ற காரணிகள் இருந்திருக்கலாம்.

நான் இப்பதிவினை செய்வது அன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவரின் தகவலின் அடிப்படையில்தான் இப்பதிவினை செய்கின்றேன். அப்போது அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து அறிவுருத்தல் கொடுக்கப்பட்டிருந்தார்கள் “அநியாயமாக உங்களது துப்பாக்கி ரவைகளை தீர்க்க வேண்டாம்” என்று இவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.இவர்கள் அவ்வறிவுருத்தல்களை புறக்கணித்தமையால்தான்  கணிசமான சிங்கள பொலிஸாரும் அதிகமாக உணர்ச்சிவசப் பட்டமையால்தான் தங்களது ரவை இருப்புக்களை தீர்த்து விட்டிருந்தாரக்ள்.

இவ்வாறான நிலைமையில் விடுதலைப்ப் புலிகளின் கரங்கள் மேலோங்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலமையை அவதானித்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது ஆயுதங்களை கீழே வைத்து தமது இரு கரங்களயும் உயர்த்தியவாறு விடுதலைப் புலிகளிடம் சரணடைய சென்றார்கள்.

இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் சென்ற பொலிஸாரின் மீது அருகிலுள்ள இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருந்தன.இப்படித்தான் இப்போர் அதிகாலையில் ஆரம்பித்து மாலை வரை தொடர்ந்தது. பின்பு விடுதலைப் புலிகளால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொடுவரப்பட்டிருந்தது. பொலிஸாரும் கைது செய்யப்பட்டு மட்டக்களப்புச் சிறைச்சாலையில் இவர்கள் சிறை வைக்கப்படிருந்தார்கள்.

இவ்வாறு வட, கிழக்கு மாகாணங்கள் பூரணமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் ஒரு சில இராணுவ முகாம்கள் மாத்திரம் இவர்களிடம் சரணடையாது விடுதலைப் புலிகளுக்கு எதிராக எதிர்த்தாக்குதல் ண்டாத்திக்கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பு மவட்டத்த்தில் “கும்புருமுணை” என்ற இடத்தில் அமைந்திருந்த இராணுவ முகாமும் “கல்லடியில்” அமைந்திருந்த இராணுவ முகாமும் , “களுவாஞ்சிக்குடி”இல் அமைந்திருந்த இராணுவ முகாமும் தவிர்ந்த ஏனைய இராணுவ முகாம்களும் . பொலிஸ் நிலையங்களும் முற்றாக விடுதலைப் புலிகளிடம் வீழ்திருந்தன.

தற்போது நிலைமை அவர்களின் பூரண கட்டுப்பாட்டில் இருந்ததால் முஸ்லிம்கள் ஒரு வித அச்சத்துடனும் , பதற்றத்துடனும் வாழவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாரக்ள். புலிகள் அதேநேரம் ஒரு அறிவித்தலையும் விடுத்திருந்தாரகள் “தற்போது அவசரகால நிலைமையை அவர்களுடைய தமிழீழ பிரதேசத்தில் பிரகடனம் செய்வதோடு, வர்த்தகர்கள் எவரும் உணவுப் பொருட்களை எவருக்கும் விற்கவோ, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துசெல்லவும் கூடாது” என்றும் எச்ச்ரிக்கை விடுத்திருந்தார்கள்.

இவாறான நிலமையில்தான் முஸ்லிம்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். தவிறவும் ஆங்கங்கே அரிசி ஆலைகளில் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் இரவோடு இரவாக விடுதலைப் புலிகளால்  உடைக்கப்பட்டு களஞ்சியப் படுத்தப்பட்டவைகள் அபகரித்து செல்லப்பட்டன.

இப்படியான ஒரு சூழ்நிலமையில்தான் பெருவாரியான நெற்களை , அரிசிகளை களஞ்சியப் படுத்தியிருந்தவர்கள் சுயமாகவே முன்வந்து இலவசமாக மக்களுக்கு பகிர்ந்தளித்த சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இப்படி அச்சகரமான சூழ் நிலைமைதான் இங்கே முஸ்லிம்களுக்கு இருந்தது. எதுவித பாதுகாப்பும் இல்லாத சூழல் அவர்கள் நினைத்தவாறு எவரையும் தாக்கலாம், கடத்தலாம் என்ற சூழல் இருந்தது.

தவிரவும், இதே னேரத்தில் இராணுவம் வெளிகந்தை, புனானை போன்ற பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை முன்னோக்கிக் கொண்டிருந்தார்கள். இராணுவம் பகுதி, பகுதியாக முன்னேறி கும்புறுமூலை இராணுவ முகாமை வந்தடைந்தபின் அங்கிருந்த இராணுவத்தினரை கூட்டிக்கொண்டு செங்கலடியிலே ஒரு பாரிய முகாமை அமைத்து விட்டு இவர்கள் ஏறாவூர் பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு, கல்லடியை நோக்கி இராணுவத்தினரின் படையணி சென்றது.

அவர்கள் போகும் போது முப்பது பேர் கொண்ட ஒரு படையணியை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்க்கு அருகாமையில் நிலை நிறுத்திவிட்டு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் வங்கி அப்போது இருந்த “இஸ்மாயில் ஸ்டோர்ஸ்” அவர்களின் கடைத் தொகுதியில்தான் இயங்கிவந்தது (ஏறாவூர் தபாலகத்திற்கு அருகாமையில்).

ஏறாவூரினுல் விட்டுச் சென்றிருந்த சுமார் முப்பது இராணுவத்தினரும் சுமார் ஏழு நாட்களே இங்கு நிலை கொண்டிருந்தாரகள். ஏழு நாட்களின் பின் அவர்களும் தமது பிரதான முகாமிற்க்கு சென்றுவிட்டார்கள்.

தற்போது இங்கு விடுதலைப் புலிகளின் நிருவாகம்தான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சூழ்நிலை மிகவும் பதற்றமானதாகவும், துனபமானதாகவும் இருந்தது. அரசாங்கத்தினால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. அத்தோடு உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு இங்கு அதிகரித்துக் காணப்பட்டது. உணவுப்பொருகளின் வினியோகம் இடம்பெறாமையினால் தெற்குடனான போக்குவரத்துகள் அதாவது பொலன்னறுவையுடன் இணைக்கப்பட்டிருந்த போக்குவரத்து  பாதைகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தன.

இங்குள்ள உணவு வினியோகத்திற்காக எதுவித வாகனகளும் செல்ல முடியவில்லை. ஆங்காங்கே ஒரு சில வர்த்தகர்கள் துவிச்சக்கர வண்டியில் பொலன்னறுவை போன்ற் சிங்களப் பகுதிகளை நோக்கிச் சென்று அங்கிருந்து அரிசி, சீனி போன்ற உணவுப் பொருட்களை அவர்கள்து துவிச்சக்கர வண்டிகளிலே அவ்வுணவுப் பொருட்களை கொண்டுவந்து வியாபாரம் செய்யும் நெருக்கடியான சூழ்னிலையில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தொடரும்…

Related Posts