“நல்ல மனிதர் நடந்தால் புல் சாகாது , சாதுவான மனிதர், யாருடனும் பிரச்சினைக்குப் போகாதவர், தானும் தன் பாடுமாக வாழ்பவர், வலிந்து சண்டை பிடிப்பவர், கெட்டவர், கோபக்காரர்..” என்று நாம் மனிதர்களை பாகுபடுத்துவது போல , துறை சார் நிபுணர்கள் காற்றையும் பாகுபடுத்தியுள்ளார்கள்.

மணிக்கு 6 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று “மென்காற்றாகும்

மணிக்கு 6 -11 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவது “இளந்தென்றல்

மணிக்கு 12-19 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவது “தென்றல்

மணிக்கு 20-29 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவது “புழுதிக்காற்று

மணிக்கு 30-39 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவது “ஆடிக்காற்று

மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவது “கடுங்காற்று

மணிக்கு 101-120 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவது “புயல்காற்று

மணிக்கு 120 கிலோமீற்றருக்கு மேல் வீசுவது “சூறாவளி

எமது பகுதியில் 1909 இல் வீசிய  சூறாவளிக்குப் பின் 1978 நவம்பர் 23 வியாழன் மாலை வீசிய சூறாவளியின் வேகம் மணிக்கு 140 கிலோமீற்றர்.

2023.11.23 அன்று கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளியின் 45 ஆவது நினைவு தினம் ஆகும்.

அந்த வியாழக்கிழமை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாலை ஆறு மணிச்செய்தி அறிக்கையினை மக்கள் செவிமடுத்துக் கொண்டிருந்த போது சூறாவளியும் ஆரம்பமானது.

ஆற்றுப்பக்கமாக இருந்து கடற்பக்கமாக வீசிய சூறாவளியில் , ஓலைக்கூரைகள், கூரைத்தகடுகள், அஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் , ஓடுகள் பறக்கத்தொடங்கின. தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து வீழ்ந்தன. மழை வேறு “கொட்டோ கொட்டென்று” கொட்டியதால் மண் வீட்டுச்சுவர்கள் இளகி “பொத பொத” வென்று வீழ்ந்த்தன.

சற்று நேரத்தில் காற்று மெல்ல ஓய்ந்தது. “விஸ் விஸ்” என்ற காற்றுச் சத்தமும் நின்றதும் ஊரில் மயான அமைதி நிலவிற்று. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

வீடுகளை இழந்து அநாதரவான மக்கள், கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு பிள்ளை குட்டிகளுடன் உறவினர்கள் தெரிந்தவர்களின் வீடுகளுக்கு ஓடித் தஞ்சம் புகுந்தனர்.

அக்காலத்தில் மாடி வீடுகள் அரிதாகவிருந்தன.ஓட்டு வீடுகளை  விரல் விட்டு எண்ணிவிடலாம்! அதிகமானவை களிமண் வீடுகள்தான். சூறாவளியாக இருந்தாலென்ன, சுனாமியாக இருந்தாலென்ன, சிறிது இடைவெளி விட்டு இரண்டாவது கட்டத் தாக்குதல் தொடுக்கும் இயல்பு உள்ளவை.

விபரீதத்தை அறியாத மக்களில் சிலர் வெளியேவந்து பொறுக்குவதிலும் , தகரங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் சேகரிப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே  சூறாவளியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமாகிறது.

சுமார் இரவு ஏழு மணியளவில் கடற்கரைப் பக்கமாக இருந்து பேரிரைச்சலுடன் அதன் மூர்க்கத்தனமும் அதிகரித்தது. பலத்த மழையுடன் நெருப்புப் பந்துகளும் பறந்து வரத் தொடங்கின.

மக்கள் திகிலடைந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிடைத்த மறை விடங்களுக்குள் பதுங்கிக் கிடந்தனர். மரணம் நெருங்கி விட்டது, உயிர் பிழைக்க மாட்டோம் என்ற பயத்தில் சிலர் கலிமாவை ஓதத்தொடங்கினர். கடுங்குளிரில் கை, கால்கள் விறைத்துப் போயின.

சுமார் 11 மணித்தியால அட்டகாசத்தின் பின்னர் விடியற்காலையில் சூறாவளி ஓய்வுக்கு வந்தது.

காலையில் பார்த்தால், மரங்கள் முறிந்து வீழ்ந்து தாறுமாறாகக் கிடந்தன. மின்சார இணைப்புக்கள் சீர்குழைந்து போயிற்று, தென்னை மர்ங்கள் தீய்ந்து  சாய்ந்து கிடந்தன.ஆடுகள் , மாடுகல், கோழிகள், பூனைகள், நாய்கள்,காகங்கள் ஆங்காங்கே செத்துக்கிடந்தன.

மதில்கள் நொறுங்கியும், வேலிகள் காணாமற் போயும், தெருக்கள் அடையாளங்காண முடியாமலும் எல்லையற்ர பெருவெளியாய் பரந்து , விரிந்து கிடந்தது ஏறாவூர்.

ஆயிரக்கணக்கான காடையர்கள் ஆயுதங்களுடன் ஊருக்குள் புகுந்து அடித்து உடைத்து அட்டகாசம் செய்தது போல் நொறுங்கிக் கிடந்தது ஏறாவூர்! R.C. ரோட்டில் , பெரிய பாலத்துக்கு பக்கத்தில் “கத்னா” செய்து படுக்கையில் கிடந்த மூன்று சிறுவர்களும், வீட்டின் சுவர் விழுந்து இறந்து போயினர்.

கொழும்புக்கு அனுப்புவத்ற்காக் மாடுகள் ஏற்றப்பட்ட எமது புகையிரத நிலையத்தில் தரித்து நின்ற புகையிரத பெட்டி காற்று வேகத்தில் தானாகவே ஓடி, வாழைச்சேனை வரை சென்றிருந்தது. இடையில் , கரையேறி தண்ட வாளங்களில் படுத்திருந்த பலர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த சூறாவளியின் காரணமாக எமதூரில் ஆங்காங்கே கொல்லப்பட்டவர்கள் சுமார் 10 பேர் ஆகும்.

தொழில் நிமித்தம் வெளியூர் சென்றவர்கள் போக்குவரத்து முற்றாக சீர் குழைந்திருந்ததால் இரண்டு, மூன்று நாட்களின் பின்னரே கால் நடையாக ஊர் வந்து சேர்ந்தனர். பசி, பட்டிணி காரணமாக அவர்கள் மிகவும் சோர்வடைந்திருந்தனர்.   அடையாளம் தெரியாமல் சவக்காலைகளில் படுத்துறங்கி காலையில் விசயம் தெரிந்ததும் அவர்கள் அடைந்த அதிர்ச்சி விபரிக்க முடியாதது.  சில இடங்களில் சவங்கள் கைவிடப்பட்டுக் கிடந்தன. அவற்றை நாய்கள் பசியுடன் பிய்த்துக் கண்டிருக்கிறார்கள்.

சூறாவளியால் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக ஆயிரம் பேர் வரை மரனித்திருக்கின்றார்கள். சுமார் 28000 ஏக்கர் நெல் வயல்கள் , தென்னந் தோட்டங்கள் நாசமாகின.பண்ணை விலங்குகள் ஆயிரக்க கணக்கில் செத்தன.

மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து திகைத்துப் போயிருந்தனர். உதவிகள் , மானியங்கள் , உலர் உணவு விநியோகம் என்பன அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட பாதிக்கப்படாத வெளியூர் தனவந்தர்களின் உணவு , உடை , உதவிகளும் மக்களை வந்தடைந்த வண்ணமிருந்தன.

வெளி மாவட்டங்களில் வேலை செய்த அர்சாங்க ஊழியர்களுக்கு நான்கு

மாத தற்காலிக இடமாற்றமும் வழங்கப்பட்டது. மக்கள் தமது இயல்பு  வாழ்க்கைக்குத் திரும்பிவர சுமார் பத்து வருடங்களாகின.

1978 – சூறாவளியை அனுபவித்த மக்கள் “இனி ஒரு சூறாவளி எமது வாழ் நாளில் வரவே கூடாது! அல்லாஹ்தான் பாதுகாக்கனும்” என்று பயத்துடன் பிரார்த்திக்கொண்டே இருக்கின்றனர். நாமும் பிரார்த்திப்போம்.

ஜனாப். எம்.வை.எம். இப்ராஹிம் (கவிமணி யூவன்னா)

ஓய்வு பெற்ற ஆசிரியர்)

புகைப்படத் தொகுப்புக்கள்

Related Posts