• மர்ஹூம் முஹாந்திரம் மீரா லெப்பை வலியுல்லாஹ்
  • மர்ஹூம் யூ.வீ.எம்.சரீப்
  • மர்ஹூம் யூ.எல்.தாவூத்
  • மர்ஹூம் அல்ஹாஜ். யூ.எல்.எம். ஹனிபா Bcom
  • மர்ஹூம் வை.எம்.ஏ.காதர்
  • அல்ஹாஜ் .எம்.எம்.இஸ்மாயில் JP
  • எஸ்.எச்.அபூஹனீபா
  • எம்.எம்.முஹைதீன்

மர்ஹூம் மீரா லெப்பை வலியுல்லாஹ்

மர்ஹூம் முஹாந்திரம் மீராலெப்பை வலியுல்லாஹ் அவர்கள் 30.10.1907 இல் உமர் லெப்பை போடியார் அவர்களுக்கும், அஹமது லெப்பை ஷேகுப்போக்கர் போடியாரின் மகளான ஆசியா உம்மா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்கள். இவர் ஆரம்பக் கல்வியை ஏறாவூர் மைனர் றோட் பாடசாலை எனறு அழைக்கப்பட்ட மட்/அறபா வித்தியாலயத்தில் பயின்று பின்பு மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் மெற்றிகுலேசன் வரை படித்தார்.

இவர் முதலில் பலாங்கொடைஅயைச் சேர்ந்த சுவாரியத்து உம்மா என்பவரை திருமணம் செய்து 18.04.1940 இல் பரீத் மீராலெப்பை அவர்களை மகனாகப் பெற்றார். முதல் மனைவியின் மறைவை அடுத்து இரண்டாவது மனைவி பக்கீர் சாஹிபு சரீபாவை பதுளையில் திருமணம் செய்து ஒரு ஆண்மகனும், இரண்டு பெண் மக்களும் உள்ளார்கள்.

இப்பெரியார் ஏறாவூர் ஓட்டுப்பள்ளிவாயல் எனும் மீரா ஜும்ஆ பள்ளிவாயல், ஆற்றங்கரை பள்ளிவாயல் , காட்டுப்பள்ளிவாயல் ஆகியவற்றிற்கு ஒரே நம்பிக்கையாளராக 1926 இலிருந்து 1954 வரையும் கடமையாற்றினார்.

முதலாவது காழி நீதிபதியாக 1936 இலிருந்து 1954 வரையிலும் கடமையாற்றினார். ஏறாவூர் பட்டின சபையில் அக்கிராசனராக 1947 தொடக்கம் 1954 வரை கடமைபுரிந்தார். 1948 ஆம் ஆண்டு புகையிலை உற்பத்தியாளர் சங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதன் தலைவராக இருந்து பல சேவைகளை செய்து வந்துள்ளார்.

1952 இல் எலிஸபத் மகாராணியார் இலங்கை வந்த போது இஅவருக்கு “முகாந்திரம்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இது இலங்கையில் 5 பேருக்கு மாத்திரம் வழங்கப்பட்டது. அதில் இவர் மாத்திரமே முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் மக்களின் அன்பிற்கும், அபிமானத்திற்கும் உரிய இப்பெரியார் சிறந்த விஷக்கடி வைத்தியராகவும் சேவையாற்றியுள்ளார். தென் இந்தியாவைச் சேர்ந்த பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களை கண்டியில் மீரா மக்காம் பள்ளிவாசலில் சந்தித்து அருள்வாக்குப் பெற்று விஷக்கடி வைத்தியம் செய்து வந்தார்.

இப்பெரியார் 24.10.1954 இல் இறையடி சேர்ந்தார். ஏறாவூர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அருகிலுள்ள அன்னாரது வன்னியனார் பரம்பரை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். தான் இறையடி சேர்ந்த பின்னரும் இவர்களின் மீஸான் கட்டையில் விஷம் தீண்டியவர்கள் விஷம் இறக்கிக்கொள்வதை தினசரி அங்கே காணலாம். இதனால் “சேர்மன் வலியுல்லாஹ்” என அன்னாரை அழைப்பதுமுண்டு.

மர்ஹூம் யூ.வீ.எம்.சரீப் JP

இவர் 30.09.1913 இல் உமர் லெப்பை போடியார் அவர்களுக்கும், அஹமது லெப்பை ஷேகுப்போக்கர் போடியாரின் மகளான ஆசியா உம்மா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்கள்.இவர் முஹாந்திரம் மீராலெப்பை வலியுல்லாஹ் அவர்களின் சகோதரர் ஆவார். ஆரம்பக் கல்வியை ஏறாவூர் மைனர் றோட் பாடசாலை எனறு அழைக்கப்பட்ட மட்/அறபா வித்தியாலயத்தில் பயின்று பின்பு மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு மத்திய கல்லூரி, கண்டி றினிட்டிக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பதுளையில் திருமணம் செய்த இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஏறாவூர் பட்டின சபையின் அங்கத்தவராகவும், தலைவராகவும் கடமையாற்றினார்.அத்துடன் ஓட்டுப்பள்ளி, ஆற்றங்கரைப்பள்ளி, காட்டுப்பள்ளி என்பவற்றிற்கு தர்மகர்த்தாவாகவும் கடமையாற்றினார். அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு தொகுதி எல்லை நிர்ணயம் சம்பந்தமாக 1958 இல் தல்கொடபிட்டிய ஆணைக் குழுவினர் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது அவ்விசாரனையில் பங்கு பற்றி தமிழர் முஸ்லிம்களுக்காக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இரட்டை அங்கத்துவ முறையில் வழங்கப்பட வேண்டுமென கருத்துத் தெரிவித்தவ்ர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறாவூரில் கல்வி அபிவிருத்தி சபை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். 24.10.1973 ஆம் ஆண்டு புனித லைலத்துல் கத்ர் இரவில் இறையடி சேர்ந்தார்.

மர்ஹூம் யூ.எல்.தாவூத் (அதிபர்)

உமர்லெப்பை – இலவப்பிள்ளை தமபதியினரின் புதல்வராக 06.04.1936 அன்று பிறந்தார். ஏறாவூரின் முன்னேற்றத்தில் அயராது பாடுபட்டார். தனது ஆரம்பக்கல்வியை பல இன்னல்களுக்கு மத்தியில் தொடர்ந்த இவர் 1954 இல் சி.பா.தா. (சா/த) பரீட்சையில் சித்தியடைந்தார்.

1957 இல் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். அங்கிருந்து அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலைக்கு தெரிவு செய்யப்பட்டு 1958/59 காலப்பகுதியில் பயிற்சி பெற்றார். முழுச் சம்பளத்துடனான ஆசிரியராக வெளியேரி தனது கடமையை தொடர்ந்தார். கலாசாலை அமைச்சரவையின் கல்வி அமைச்சராகவும் , கலாசாலையின் வருடாந்த சஞ்சிகையான “கலை அமுதம்” குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்ட YMMA கிளையின் முதற் செயலாளராக இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தார்.

1956 ஆம் ஆண்டு ஏறாவூரில் நடைபெற்ற “திருக்குர்ஆன்” மாநாடு நடைபெற பெரிதும் பங்காற்றினார். 1960 இல் மூதூர் அக்கரைச்சேனை மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்றார். 1961 இல் கொழும்பு அல் இக்பால் மகாவித்தியாலயதிற்கு இடமாற்றம் பெற்றுச்சென்றார்.

கொழும்பில் பணியாற்றிய இவருக்கு எழுத்தாளர்களினதும், அரசியல்வாதிகளினதும், இலக்கியவாதிகளினதும் அறிமுகம் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திய இவர் பிற்காலத்தில் ஏறாவூரின் கல்வி வளர்ச்சியிலும், சமூக சேவையிலும் தன்னை நிலைனிறுத்திக் கொண்டார்.

அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து பல ஆண்டுகள் தொண்டாற்றி ஆசிரியர்கள் மத்தியில் பிரப்லமடைந்தார்.

ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றதோடு பேராதனை பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப்பட்ட பரீட்சைக்குத் தோற்றி 1968 இல் “BA” பட்டதாரியாகி ஏறாவூரின் முதலாவது பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.

1980 இல் அலிகார் மகா வித்தியாலயதிற்கு வந்து முழு நேரத்தையும் அலிகாரின் கல்வி வளர்ச்சிக்காகவும், அதன் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார். இவர் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் க.பொ.த சாதாரண மற்றும் க.பொ.த உயர்தர பரீட்ச்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.

இவர் கல்வித்துறை மட்டுமல்லாது பொதுச் சேவையிலும் தன்னை அர்பணித்துக் கொண்டார். ஏறாவூர் ப.நோ.கூ. சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், ஆற்றங்கரை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவராகவும் பணியாரியுள்ளார்.

இவரின் முயற்சியினால் “புனர்வாழ்வுச் சபை” ஒன்றும் ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் பிரிக்கப்பட முடியாதவர்கள் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த இவர், தமிழ், முஸ்லிம் நல்லுறவை மேம்படுத்த பாடுபட்டார். அவர்களது நியாயமான போராட்டங்களை ஆதரித்தார். 1977 தொடக்கம் 1990 வரை அன்னாரது சகல நிகழ்வுகளிலுமான பங்களிப்பு அளப்பெரியது.

தமிழீல விடுதலைப் புலிகளின் “இணக்க சபை”யிலும் முக்கிய பங்கௌ வகித்தார்.

1990 மார்ச் மாதம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை புலிகள் இயக்க முக்கியஸ்த்தகர்கள் அழைக்கப்பட்டு “வாகரை”யில் நடைபெற்ற ஒன்று கூடலில் இவரும் கலந்து கொண்டார்.

இவ்வாறு ஊர்ரின் முன்னேற்றத்திற்கும் , சமுதாய நலனிற்கும் பாடுபாட்ட இப்பெருமகன் 1990/07/04 அன்று ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முந்திய நாளின் பின்னேரப் பொழுதில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள். ஜனாஸாவும் கிடைக்கபெறவில்லை.

இப்பெருமகனின் மறைவு எமதூருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மர்ஹூம் வை.எம்.ஏ.காதர் (அதிபர்)

யாசீன் பாவா முஹம்மது அப்துல் காதர்.அவர்கள் 1934.06.09, சனிக்கிழமை யாசின் போடியாருக்கும், பாத்திமா அவர்களுக்கும் பிறந்தார்.

இளவயதுமுதலே குடும்ப விடயத்திலும் சரி சமூக சேவையிலும் சரி மிகவும் அர்ப்பணிப்பாக இயங்கியவர். இதனால் அவரது தந்தையால் வெகுவாக நேசிக்கப்பட்டார். ( இவரது வழி காசிம்லெப்பை- அலியார்(கொன்னலியார் போடி)- தந்தை யாசின் போடி – முகம்மது அப்துல் காதர்).

1952 ம் வருடம் மிகஇளவயதிலேயே ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்பட்டார்(18 வயது). பலாலி மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் தொழில்வான்மை பயிற்சி நெறியை பூர்த்தி செய்தார். மருதமுனை, பாதுக்கை, பொலன்னறுவை போன்ற இடங்களில் தனது சேவையால் தடம் பதித்தார். உறுகாமத்திலும் ஓரிரு வருடங்கள் அதிபராக கடமையாற்றினார். அலிகாரில் தலைமை ஆசிரியராகவும், பதில் அதிபராக கடமையாற்றி அலிகாரின் வளர்ச்சியில் மறைக்க முடியாத பங்களிப்பை வழங்கியவர். அலிகார் முஸ்லிம் பாடசாலையாக பெயர் மாற்றப்பட்டதில் மிக தீவிர பங்கெடுத்ததால் பதவியை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. மாக்கான் மாக்கார் கல்லூரியின் உருவாக்கத்தில் மிகப்பெரும் பங்களிப்பை செய்ததுடன் ஸ்தாபக அதிபராகவும் கடமை புரிந்தார். இறுதியாக அல்-அஸ்கர் வித்தியாலயத்தில் கடமை புரிந்து 1989 ல் 37 வருட சேவையின் பின்னர் தனது 55ஆவது வயதில் ஓய்வுபெற்றார்.

ஆசிரிய சேவைக்காலத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களத்திலும் சில வருடங்கள் கடமையாற்றினார்.

அரசியலில் சமூகம்சார் செயற்பாடுகளுக்காக தீவிர பங்கெடுத்தவர். மர்ஹூம் மாக்கான் மாக்காரின் இணைப்பாளராக செயற்பட்டபோது ஊரின் அபிவிருத்தியில் பன்முக பங்களிப்பை வழங்கிவர். முஸ்லிம்களின் கல்விமறுமலர்ச்சித் தந்தை மர்ஹூம் பதியுதீன் ம ஃமூத் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றினார்.

கல்வி அபிவிருத்தி சங்கத்தை ஆரம்பித்ததில் இவரும் ஒருவர்.
80களில் ஸ்தாபிக்கப்பட்ட இணக்க சபையின் தலைவராக கடைமை புரிந்ததுடன், அது 90களின் பின்னர் புனரமைக்கப்பட்ட பின்னரும் நீண்ட காலமாக தலைவராக கடமை புரிந்தார்.
ஏறாவூர் புனர்வாழ்வுச் சங்கம், பள்ளிவாயல் நிருவனங்களின் சம்மேளனத் தலைவராகவும் கடைமை புரிந்து இவ்வூருக்காக அதிக அர்ப்ணிப்புகளை செய்தவர்
பாடசாலைக்காலங்களிலும், ஆசிரிய சேவைக் காலங்களிலும் சாரணியத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர். அக்காலத்தில் உயரிய பதக்கமான Wood Badge பெற்றுக்கொண்டவர்.

விளையாட்டுத்துறையில் உயரம் பாய்தல், நீளம் பாய்தல் மற்றும் கரப்பந்து என்பவற்றில் சாதித்ததுடன், ஊரின் முதலாவது விளையாட்டுக் கழகமான Brothers Team ஐ இவருடை உடன் பிறந்த, ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் உருவாக்கினார்.

பல காணிகளை சமூக ஸ்தாபனங்களுக்கு அன்பளிப்புச் செய்தது மட்டுமல்லாது, பலகாணிகளை சிறிய விலைகளுக்கே வசதி குறைந்தவர்கள் வீடு கட்டுவதற்காக விற்றார்.

இனங்களுக்கிடையிலான மோதல்களின் போது அதன் சூட்டினை தணிப்பதிலும் பெரு வெள்ளம் சூறாவளி சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது துரித மாக செயலாற்றி மக்களின் கண்ணீரை துடைப்பதிலும் தமது நேரங்களை தியாகம் செய்தவர்.

புனர் வாழ்வுச் சங்கத்தை உருவாக்கி இன மோதலால் அனாதரவாக்கப்பட்ட எமது ஏழை எளிய மக்களின் விமோசனத்திற்காக அல்லும் பகலும் உழைத்தவர். புலிகளுடன் பேச்சு வார்தை என்றாலும் சரி, புரிந்துணர்வு உரையாடல் என்றாலும் சரி அனைத்திலும் முன்னின்று செயற்பட்டவர். அதிலும் யாழ்ப்பாணத்திலும்,எமதூரிலும் சமகாலத்தில் புகையிலை உற்பத்தியாளர் சங்கத்திற்கென கம்பீரமான கட்டிடங்கள் உருவாக காரணமாக இருந்தவர்.

அந்த கட்டிடமே இன்றைய ப.நோ.கூட்டுறவு சங்க தலைமை காரியாலய கட்டடம்(அக்காலத்தில் அக்கட்டடம் புகையிலைச் சங்கம் என்றே அழைக்கப்பட்டது). மாக்கான் மாக்கார் வித்தியாலய உருவாக்கத்திலும் முதன்மையானவர்.
சிறந்த பேச்சாளர். அவரது உரையில் ஆழமான கருத்துக்கள், நகைச்சுவை பொதிந்திருக்கும். சிறந்த நன்கொடையாளர். அப்துல் காதர் வித்தியாலயம் 90 களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படுவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை மனமுவந்து அன்பளிப்பு செய்தார்.

அல்ஹாஜ் .எம்.எம்.இஸ்மாயில் JP

மு.முஹம்மது தம்பி-அலியார் செய்யதும்மாவிற்கும் தலைப் பிள்ளையாக 09.09.1949 ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை ஏறாவூர் பிரதான வீதி அரசினர் சிரேஸ்ட தராதரப் பாடசாலை (தற்போதைய அலிகார் தேசிய பாடசாலை) இல் கற்ற இவர், 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.சாதாரண பரீட்சையில்  சித்திபெற்று , உயர்தரக் கல்வி கற்க குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர முடியாமல் மர்ஹூம் இஸ்மாயில் டைலர் மற்றும் சொக்க லிங்கம் டைலர் ஆகியோரிடம் தையற்கலை பயின்று கொண்டிருந்த வேளையில் மரைக்கார் தம்பி டைலர் அவர்களின் ஆலோசனையின் படி , அவரது உதவியுடன் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கல்வியை கற்றார்.

1.10.1970 இல் இவருக்கு கிழக்குப் பிராந்திய கலிவி அலுவலகத்தில் எழுதுனர் வேலை கிடைப்பெற்றது. அத்தோடு மீண்டும் க.பொ.த.சாதாரண தரத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்களில் தேற்சி பெற்றார்.

பொது எழுதுனர் தரம் II , தரம் I போன்ற பதவியுயர்வுப் பரீட்சைகளிலும் சித்திபெற்று பதவியுயர்வுகளைப் பெற்றார். 1990இல் இடம்பெற்ற இன வன்செயலைத் தொடர்ந்து மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு இடமாற்றம் பெற்று வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சில் பணிபுரிந்தார்.

1990இல் திருகோணமலையிலிருந்த  வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றும் போதே எழுதுனர் சேவையின் அதிவிஷேட தர பரீட்சையில் சித்திபெற்று நிருவாக உத்தியோகத்தராக 01.06.1991 இல் நியமனம் பெற்றார்.இவரே ஏறாவூரின் முதல் “சுப்பர் க்ரேட்” உத்தியோகத்தராகும்.

சீனி முஹம்மது ஷரீபா ஆசிரியையை 18.12.1976ஆம் ஆண்டு கரம்பற்றினார்.

வகித்த பதவிகள்

பொது எழுதுனர் (பிராந்திய கல்வி அலுவலகம், மட்டக்களப்பு)

நிதி உதவியாளர் (கோட்டக்கல்வி அலுவலகம் , ஏறாவூர்)

நிருவாக உத்தியோகத்தர் (வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சு , திருகோணமலை)

செயலாளர் – பிரதேச சபை (தற்போதைய நகர சபை)

நிருவாக உத்தியோகத்தர் / மேலதிக மாவட்ட பதிவாளர்

(பிரதேச செயலகம், ஏறவூர்)

நிருவாக் உத்தியோகத்தர் (வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மத்தி)

Related Posts