Dr ஜலீலா முஸம்மில் (வைத்திய அதிகாரி)

கொரோனா உலகளாவிய ரீதியில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை அச்சத்தில் உலுக்கி எடுத்த ஒரு பெருந்தொற்றாகும். கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே எல்லோர் மனங்களும் பயந்து நடுங்கி பதைப்பதைத்த காலம் கடந்து விட்டது. கொரோனா பெரும் தொற்றுக் காலத்தில் மக்கள் அனுபவித்த கஷ்டங்களும் தொல்லைகளும் மரணங்களும் இன்றும் நெஞ்சங்களில் மாறாத வடுக்களாய் காணப்படுகின்றன. இத்துன்பியல் அனுபவமானது சிறுவர் முதல் பெரியோர்வரை மிகக்கொடூரமான ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. உலகையே ஆட்டங்காணச் செய்த இந்த வைரஸ் தாக்கத்தினால் மக்களின் வாழ்வு பெரிதும் தொய்வு நிலைக்கு உள்ளானது. இன்றுவரை இந்த நோயின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருப்பதை நாம் காணலாம்.

2020 ஆம் ஆண்டினை வரவேற்க உலக மக்கள் தயாராக இருந்தவேளை 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூகான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டறியப்படாத புதிய வைரஸ் இனமாக இது காணப்பட்டது.உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட் -19 ஐ ஒரு பெருந்தொற்றுநோயாக (pandamic) அதன் வீரியமான பரவுகை காரணமாக அறிவித்தது. யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு கோரத்தாண்டவத்தை இந்தப் பெருந்தொற்று உலகிற்கு ஆற்றிச்சென்றது அனைவரும் அறிந்ததே.இந்த வைரஸைப் புரிந்துகொள்வதற்கும் சமாளிப்பதற்கும் முன்னெப்போதும் இருந்திராத வகையிலான அறிவியல் முயற்சியை இந்த உலகம் கைக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரத்திலுள்ள பெரிய மீன் சந்தையில் முதன் முதலில் தோன்றியது. 4பேர் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காது இறந்தனர்.இதனைத் தொடர்ந்து பலர் நிமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளாக இந்த நோயாளர்களின் இரத்த மாதிரிப் பரிசோதனையில் இதுவரை இனங்காணா புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது பரவக்கூடிய நோய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜனவரி மாதம் வருடக் கொண்டாட்டம் என்பதனால் வூகானிலிருந்து பலர் தமது சொந்த நாட்டுக்குப் பயணித்தனர். இவர்கள் பல நாட்டாளர்களாக இருந்தனர். மருத்துவ மாணவர்கள்⸴ வணிகர்கள்⸴ சுற்றுலாப் பயணிகள் என பலரும் வூகானை விட்டு வெளியேறினர்.
இதுவே பின்னாளில் உலகம் முடக்குவதற்குக் காரணமாயிற்று. அனைத்து உலக நாடுகளும் ஆரம்பத்தில் சீனாவிற்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்க அடுத்த கணமே வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தொடர்ச்சியாக இரையாகின.

இத்தாலி⸴ பிரான்ஸ்⸴ அமெரிக்கா என பலம் கொண்ட நாடுகளெல்லாம் சுகாதார கட்டமைப்பு ரீதியாகவும்⸴ பொருளாதார ரீதியாகவும் ஆட்டம் கண்டன.அதேபோன்று இலங்கையிலும் கொரோனாவின் பாதிப்புகள் ஆரம்பமாகத் தொடங்கின. இறப்பு விகிதம் அதிகரித்த வண்ணமே சென்றது. இறப்பவர்களைத் தகனம் செய்யக்கூட முடியாத அளவு எல்லா நாடுகளும் திணறின. நாடுகள் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதி⸴ சர்வதேசப் பயணங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. பெரும்பாலான உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினால் முடங்கிப் போயின.

இலங்கையிலும் கொரோனாப் பெருந்தொற்று அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்தது. நாட்டு மக்கள் யாவரும் முடக்கப்பட்டு சமூக இடைவெளி பேணுமாறு கோரப்பட்டனர். அனைவர் மனதிலும் கடும் பீதி ஆட்கொண்டது. முகத்துக்கு முகம் பார்த்துக் கொள்ளவும் உறவினர்களைச் சந்தித்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அருகிப் போயின.மக்கள் அனைவருக்கும் மரணத்தைப் பற்றிய பயமே அதிகமிருந்தது. அதிகக் கவலையில் ஆழ்த்தும் ஒரு விடயமாக கோரோனாத் தொற்று உலகளாவிய ரீதியில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.கொரோனா மரணத்தைப் பற்றியே மக்கள் அதிகம் பேசிக் கொண்டனர். நோயாளர்களைப் பார்க்க முடியாது, உறவினர்களைப் பார்க்க முடியாது, ஜனாசாவை/இறந்த உடலைப் பார்க்கவியலாது, தொழுகை நடத்த இயலாது மக்கள் பெருங்கட்டுப்பாட்டிற்குள் முடங்கித் தவித்தனர்.இறந்த உடலானது ஒரு பொலித்தீன் பையில் கட்டப்பட்டு இறுதி ஊர்வலத்திற்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இரு சுகாதாரப் பணியாளர்களோடு மாத்திரமே அடக்கம் இடம்பெற்றது. மக்கள் அனைவரும் கதிகலங்கி விதியை நொந்தவாறு வாழ்க்கை நடத்தினர். கொரோனா மரணம் மக்கள் மனங்களில் ஆழ்ந்த துயரத்தை
ஏற்படுத்திச் சென்றது என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு தொகுதி தொகுதியாக ஊர்ஊராக கொரோனா ஆன்டிஜென் சோதனைகளும் பிஸிஆர் சோதனைகளும் நடந்துகொண்டிருந்தன. தனிமைப்படுத்தல் முகாம்களில் தொற்றாளர்கள் அடைக்கப்பட்டனர். நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு வைத்தியசாலைகளில் விசேட கொரோனா பிரிவுகள் உருவாக்கப்பட்டன. மரணித்தவர்கள் கடும்பாதுகாப்பான முறையில் தனியாக எரித்தும் புதைத்தும் அடக்கம் செய்யப்பட்டனர்.

வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு ஒவ்வொரு நாளும் இதன் தாக்கத்தால் ஒவ்வொரு நாட்டையும்,நாட்டு மக்களையும் சுயநலமாக சிந்திக்கத் தூண்டிவிட்டது என்றே கூற வேண்டும். இதன் காரணமாக ஒவ்வொரு நாடும் தங்கள் எல்லைகளை மூடித் தம் நாட்டு மக்ககளை காக்க முனைப்புடனான நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதில் குறியாக இருந்தன. இதேவேளை மேலைத்தேய நாட்டவர்களை நோய்க்கிருமித் தொற்றுக்குள்ளானவர் என்ற சந்தேகத்தையும், மனப்பீதியையும் சமூகத்தில் உண்டாக்கியது. இதனால் நாட்டுக்குள் முடங்கிய மக்கள் வீட்டுக்குள்ளும் முடங்கும் ஓர் மனநிலையை மக்கள் மத்தியில் இக்கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்திச் சென்றது வருத்தமான விடயமே.

இது மட்டுமன்றி ஒரு இயல்பான வாழ்க்கை வாழ்ந்த மக்களின் போக்குவரத்து, பொருளாதாரம், உணவு, கல்வி,நிர்வாகக் கட்டமைப்பு, சமூக ஒன்று கூடல் போன்ற அடிப்படை அம்சங்களையே கொரோனா வைரஸின் தாக்கமானது கேள்விக் குறியாக்கியது. இதனால் சமூகத்தின் ஓர் பயங்கலந்த வாழ்க்கை முறைமையும், அடுத்து என்ன நடக்குமோ என்று எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற தன்மையும் மக்கள் மனங்களில் ஆழமாகப் பாதித்தன. இதனால் சமூகத்தின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு எதை செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற பல கேள்விக்குறியோடும், சந்தேகத்துடனும் கூடிய நடத்தைக் கோலங்களே சமூகத்தில் மக்கள் மத்தியில் காணப்பட்டன.இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதித்தது மட்டுமன்றி, மனநிலைகளையும், மனப்பாங்குகளையும் கூட கொரோனா வைரஸ் பாதிப்பு மாற்றிச்சென்றது என்பத மறுக்க முடியாத உண்மை.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முன்பு எப்போதுமே இதுபோல இணைந்து பணியாற்றியதில்லை. பொதுவாக பலபல ஆண்டுகள் எடுத்திருக்கக்கூடிய தகவல் சேகரிப்பு, ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசிகளை உருவாக்குதல் போன்றவை, சில மாதங்களிலேயே செய்து முடிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் கொரோனா தடுப்பூசி மிகவும் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டமை பாரியதோர் அநுகூலமிக்க வேலைப்பாடு என்றே கூறலாம்.

பொதுவாக ஒரு தடுப்பூசி தயாரிக்க 10 ஆண்டுகள் ஆகலாம் . ஆனால் ஃபைசர், மாடர்னா மற்றும் அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிகள் போன்றவை, அந்தக் காலத்தின் ஒரு பகுதியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கென புதிய தொழில்நுட்பம், நிதி அதிகரிப்பு மற்றும் நிர்வாகத்துறையின் தலையீட்டு குறைப்பு ஆகியவற்றுக்கே உலக மக்கள் நன்றி சொல்லவேண்டும். .

கொரோனா வைரஸ் அறிகுறிகள்

தொடர்ச்சியான இருமல் ஏற்படும் இந்த இருமல் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் 3 அல்லது 4 தடவை தொடரலாம். மேலும் காய்ச்சல் அதிகரிக்கும்⸴ உடல் வெப்பமானது 37.8டிகிரி செல்சியத்தை விடவும் அதிகமாகும்.

வாசனை அல்லது சுவையை உணர முடியாத நிலை ஏற்படும். ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் தோன்றும். தலைவலி⸴ சளி முதலான அறிகுறிகளும் தோன்றும்.

வைரஸ் முதல்முதலாக தாக்கிய காலகட்டத்தில் காணப்பட்ட அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் இருமல். விரைவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலர் வாசனை அல்லது சுவை உணர்வை அல்லது இரண்டையுமே இழத்தல், WHO வின் மிகவும் பொதுவான அறிகுறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தொற்றுநோய் தொடர்ந்தபோது மேலும் சில பொதுவான அறிகுறிகள் பதிவு செய்யப்பட்டன, அவை வருமாறு:

  • தொண்டை வலி
  • தலைவலி
  • வலிகள் மற்றும் நோவு
  • வயிற்றுப்போக்கு
  • தோலில் வெடிப்பு ; கைவிரல்கள் அல்லது கால்விரல்களின் நிறமாற்றம்
  • சிவப்பு அல்லது எரிச்சல் மிகுந்த கண்கள்

மிகவும் நோய்வாய்ப்பட்ட மக்களை உடனடி மருத்துவ சிகிச்சை பெற WHO ஊக்குவிக்கிறது. தீவிர அறிகுறிகளில் சுவாசிப்பதில் சிரமம், பேச்சு அல்லது இயக்கம் இழப்பு, குழப்பம் அல்லது மார்பு வலி ஆகியவை அடங்கும்.

முன்பே சில உடல்நலப்பிரச்சனைகள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் கோவிட் -19 காரணமாக கடுமையாக நோய்வாய்ப்படக்கூடும். மேலும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் அதாவது சிஓபிடி போன்ற நுரையீரல் நோய்கள், நீரிழிவு, இதய நோய் அல்லது புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் போன்றவர்களுக்கும் கொரோனா நோய் மிகவும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. ஏனெனில் இவ்வகையானோரில் நீர்ப்பீடன சக்தி (நோய் எதிர்ப்பு சக்தி) சாதாரண மக்களை விட பெரும்பாலும் குறைவாகவே காணப்படும். எனவேதான் கொரோனா வைரஸின் தாக்கம் இவ்வாறான நோயாளிகளில் வீரியமாக வெளிப்பட்டு அதிக மரணங்களை தோற்றுவித்தது.

பெரும்பாலான நோயாளிகள் விரைவாகக் குணமடைவார்கள் என்றாலும் சிலருக்கு கோவிட் -19, இதயம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்திச் சென்றது வரலாற்று உண்மையாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல்

மக்கள் தும்மும்போது அல்லது இருமும்போது வெளிவரும் திரவத்துளிகள்,காற்றில் நீடிப்பதை விட மேற்பரப்பில் விழுந்து அதன் மூலம் கோவிட் 19 பரவுவதாக தொற்றுநோயின் முதல் சில மாதங்களுக்கு WHO அறிவித்தது.

அதனால்தான் கை கழுவுதல் ஒரு முக்கிய தடுப்பு நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்கள் மேற்பரப்புகளையும் பொருட்களையும் மாசுபடுத்துவதைத் தடுத்து வைரஸ் பரவுவதை தடுப்பதே இதன் நோக்கம்.

கோவிட் -19 பெரும்பாலும் ஏரோசோல் (திரவ சாரல்) பரவல் மூலம் நெருங்கிய தொடர்பு உள்ள மக்களிடையே பரவுகிறது என்று பின்னரான சான்றுகள் அறிவிக்கப்பட்டன.

இது குறிப்பாக உட்புறங்களில், நெரிசலான மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களில், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் நீண்ட நேரம் செலவிடும்போது பரவுவதாக WHO கூறுகிறது.

ஆகவேதான் மனித வாழ்வில் சந்திப்பு ரீதியான பல கட்டுப்பாடுகள், மக்களை வீட்டிற்குள்ளோ வெளியிடங்களிலோ சந்திக்க தடை விதித்தன. மக்கள் கூட்டம் சேர்வதையும் பொதுவான நிகழ்ச்சிகளையும் (திருமணம், மரண வீடு, மற்றும் பல்வேறுபட்ட மனிதர்களின் ஒன்று கூடல்கள்) அரசாங்கம் முற்று முழுதாக தடை விதித்தது.

கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

  • கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள மூக்கு மற்றும் வாயை மூடும்படி முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பினால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • தொற்றுப் பாதிக்கப்பட்ட இடங்களில் அல்லது தொற்றாளர்கள் பயணம் செய்த இடங்களிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை தேவையற்று வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • குறைந்தது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பராமரித்தல் மிகவும் முக்கியமானதாகும்.
  • அறைகளை நன்கு காற்றோட்டமாக வைத்திருக்கவும், நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும் முயற்சிக்க வேண்டும். இருமல் வந்தால் முழங்கையை மடக்கியோ அல்லது துடைக்கும் பேப்பரால் வாயை மூடிக்கொண்டோ இரும வேண்டும்.

மக்கள் மத்தியில் இனம் புரியாத பதற்றத்தினையும் நோய்த் தாக்கத்தினையும் கொரோனா உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் சில உளப்பிரச்சினைகளையும், மனப்பாங்கு மாற்றங்களையும் ஏற்படுத்திச் சென்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சாதாரண தடிமன், காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு பலர் மருத்துவரை நாடாமல் வீட்டிலேயே தங்களால் இயன்ற வைத்தியத்தை மக்கள் செய்து வந்தனர்.இதற்கு காரணம் மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா பாதிப்பு என முத்திரை குத்திவிடுவார்கள் என ஆழ்மனதில் காணப்படும் பயம் தான் முக்கிய காரணமாக இருந்தது.இதற்கான அடிப்படை என்னவென்றால் கொரோனா நோயின் வீரியமும் தாக்கமும் அதன் மரண எண்ணிக்கையும் என்று கூறினால் அது மிகை இல்லை என்றே நினைக்கிறேன். உண்மையில் இது மக்கள் மத்தியில் குறுகியகால,நீண்டகால மனப்பாதிப்பினையும், மனப்பாங்கு மாற்றத்தினையும் ஏற்படுத்தியே சென்றது.

கோவிட் -19 பற்றி நமக்குத் தெரியாதவை

கோவிட் -19 குறித்து முன்னெப்போதும் இருந்திராத வகையில் விஞ்ஞான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், வைரஸைப் பற்றி நமக்குத் தெரியாதவை இன்னும் நிறைய உள்ளன.

குறிப்பாக எப்போது நாம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அடைவோம், சிலர் ஏன் மற்றவர்களை விட அதிக நோய்வாய்ப்படுகிறார்கள், அல்லது வைரஸ் எவ்வாறு மனிதர்களிடையே முதன்முதலில் வந்தது போன்றவை.

நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும், அல்லது தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பிற்கும் நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பாதுகாப்பு கவசத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளதா என்பதைக் கூறுவதும் கடினம்.

கோவிட் -19 ஒரு நபருக்கு மீண்டும் ஏற்படுமா அல்லது இரண்டாவது முறையாக வரும்போது தீவிரம் குறைவாக இருக்குமா என்பதும் நமக்குத் தெரியாது.

ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். அதே போல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பிறழ்வதால் அதன் மரபணுத்தொடரை வரிசைப்படுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெறுகிறது.

எதிர்காலத்தில் இந்த வைரஸையும் அதன் திரிபுகளையும் சமாளிக்க நாம் தயார் நிலையில் இருப்பதற்கு அவர்களின் முயற்சிகள் பக்கபலமாக உதவும் என்று நம்புவோம்.

இன்றுவரை கொரோனா வைரஸ் பிடியிலிருந்து உலக நாடுகள் முழுமையாக வெளிவரவில்லை. பல உலக நாடுகளில் இன்றும் வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டேயுள்ளது.

எனவே நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். இப்போது தடுப்பூசிகள் பல உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையில் பாவனைக்கு வந்துள்ளன. எனவே அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.தடுப்பூசியின் பின்னரே கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இந்த உலகம் மெது மெதுவாக சாதாரண நிலைக்கு திரும்பிக் கொண்டதை நாம் நினைவுகூர வேண்டும். ஆராய்ச்சியாளர்களின் மகத்தான பணியைப் போற்றியே ஆக வேண்டும்.

இன்னும் எமது நேர்மறையான உளத்திறனை அதிகரிப்பதுடன் நேர்முகமான சிந்தனைப் போக்கினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எம்மை பற்றிய ஓர் நம்பிக்கையை நாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் உடலுக்கு சக்தி தரக்கூடிய பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுவதுடன், எமது சுகாதாரத்திலும் நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும். மேலும், இயற்கையோடு ஒட்டிவாழும் வாழ்க்கை முறைக்கு எம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உண்மையில் இவ்வாறான பிரச்சினைக்கு காரணம் மனிதன் இயற்கையின் நியதிகளை, விதிகளை மாற்றியமைக்க முற்பட்டதேயாகும். இயற்கையை மனிதன் மாற்றி அமைத்தால் இவ்வாறான பாரியதொரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதனை மனிதன் பாடமாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸிடமிருந்து அனைவரும் இனிவரும் காலங்களிலும் பாதுகாப்பாக இருக்க, வைரஸ் இல்லா உலகைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Related Posts