ஜனாப். பாறூக் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)

கொலை செய்யப்பட்ட மர்ஹூம் உஸைறா யூசுப் அவர்களின் சகோதரரும், கொலை செய்யப்பட்ட   மர்ஹூம் ஜனீறா பானுவின் தாய் மாமா அவர்களின் ஆதங்கமும், மனக் குமுறல்களும்.

ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் தனிமனித உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கண்டன உரிமை , கருத்துக் கூறும் உரிமை , வாழ்வுரிமை போன்ற உரிமைகளின் அடிப்படையிலும், மனித நேயன், சமூகப் பற்றாளன் என்ற வகையிலும் எனது கருத்துக்களை சாதி, மத பேதமற்ற முறையில் மக்களாகிய உங்கள் மேலான கவனத்திற்கு தருகிறேன்.

கடந்த 11.09.2016 , அறபா தினத்தன்று அதிகாலை எனது குடும்பத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவமானது ஊரில் பெரும் அதிர்ச்சியையும், நிகரில்லாத் துன்பத்தையும், மக்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

அதன் காரணமாக ஊர் வாழ் மக்களாகிய ஆண், பெண் , சிறுவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் கதறி அழுதனர், அக்காட்சி இன்றும் என் மனதில் திரையோடிக்கொண்டே இருக்கிறது.

கள்ளம், கபடம், சூதுவாது அறியாத எனது எனது தாய், தந்தையின் வழிகாட்டலின் பின்னர் நாங்கள் நற்பண்புடனையே வளர்ந்தோம். என் பெற்றொருக்கு பிறந்த நாங்கு பிள்ளைகளில் மூவர் ஆண்கள், ஒரே ஒருவர் பெண் அதில் நானே தலை மகன்.

ஆரம்ப காலத்தில் போதுமான பொருளாதார வசதியின்றி , பசியும், பட்டினியுமாக வாழ்ந்தோம். ஆனால், நாங்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருந்ததில்லை. அதனை எனது தாய் அனுமதிக்கவுமில்லை. பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலை விட்டு விலகியும் கூட வாலிப வயதையடைந்த எங்களை யாருக்கும் அடிமையாகவோ அல்லது கூலி வேலை செய்பவர்களாகவோ அவர்கள் ஓரிடமும் அனுப்பியதில்லை, கண்டித்ததுமில்லை.

மாறாக “ஏதாவது அரச உத்தியோகம் கிடைக்கும் வரை நீங்கள் எங்களுடனேயே இருங்கள்” எனக்கூறி தவிர்த்து விட்டனர்.

எனது தாய் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அல் குர்ஆன் மதரஸா நடாத்தி வந்துள்ளார். அப்போது வேறு பெண்கள் நமதூரில் அல் குர்ஆன் சொல்லிக் கொடுக்கவில்லை , ஆண்களே ஓதிக்கொடுத்துள்ளனர்.

எங்களது தந்தை “ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபை”யில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவ்விருவரது வருமானத்திலும் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. சும்மா இருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது எனக்கு வெட்கத்தையும், மனவேதனையயும் ஏற்படுத்தியது. அதன் காரணமாக நான் பொலிஸ் வேலைக்கும் , ஜெயிலருக்கும் மனுப்பண்ணினேன். இதனை அறிந்த எனது தாய் “அந்த வேலைகள் நமக்குச் சரிவராது விடுவிடு, வேறு ஏதாவது குமாஸ்த்தா வேலை, ஆசிரியர் உத்தியோகம் என்றால் நீ போகலாம்” என தடை போட்டுவிட்டார்.

இதனிடையே எனது தங்கையும் பருவ வயதை எட்டிக்கொண்டிருந்தார். அது எங்கள் எல்லோர் மனதிலும் கவலையை ஏற்படுத்தத் தொடங்கியது. காரணம் தங்கை பெரியவளானதும் திருமணம் செய்து வைக்க ஒழுங்கான வீடில்லை, வீட்டை நிர்மானிக்க பெருந்தொகை பணம் தேவை.

அப்படியிருக்கும்போது அல்லாஹ்வின் அருளால் எனக்கு ஆசிரிய நியமனமும் , தம்பிக்கு சந்தை மேற்பார்வையாளர் பதவியும் கிடைத்தது. அப்போதிலிருந்து நாங்கள் நால்வரும் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, சீட்டிலிருந்து சேமிப்பின் மூலம் பணத்தைச் சேர்த்து படிப்படியாக காலகிரமத்தில் புது வீட்டடைக் கட்டி முடித்தோம். இப்போது தங்கையும் வயதுக்கு வந்து ஓரிரு வருடங்கள் கழிந்துவிட்டன. அதன் பின்னர் ஒரே வருடத்தில் நான், தங்கை, தம்பி ஆகிய மூவருக்கும் திருமணம் நடந்தேறியது.

எனது தங்கையின் கணவரான யூசுப் ஆசிரியரும் , நானும் ஒரே பாடசாலையில் படித்து ஒன்றாக மூன்று வருடங்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைப் பயிற்சி முடிந்ததும் , திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பலகாமம் என்ற ஊரிலுள்ள ஒரு பாடசாலையில் தங்கையின் கணவர் கடமையேற்றார். நான் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் கடமையேற்றேன்.

திருமணம் செய்து கொண்ட எனது தங்கையும், கணவரும் நீண்ட காலம் ஒன்றாகச் சேர்ந்து வாழவேயில்லை. மாதமொரு முறை  வீட்டுக்கு வந்து இரண்டு அல்லது நாங்கு நாட்கள் தங்கிவிட்டுச் செல்வார். அக்கால கட்டத்தில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அது ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போது மஞ்சள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை சிகிச்சை பலனின்றி 1984 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.

இத்தாக்கம் எனது தங்கையை மிகவும் மோசமாகப் பாதித்தது. காலப்போக்கில் குழந்தையின் எதிர்கால நலன் கருதி தனது மறுவாழ்வைத் தியாகம் செய்து பிள்ளையின் கல்வியை பட்டப்படிப்புவரை கொண்டு சென்றார். அதற்கு நாங்களும் அனுசரனையாக இருந்தோம்.

அந்தோ பரிதாபம் “ஜனீறா பானு” என்ற அந்தப் பெண்பிள்ளை பாதகர்களால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து பட்டமளிப்பு விழாவுக்கு வருமாறு அழைப்புக் கடிதம் வந்தது. அழைப்பைப் பார்த்ததும் எங்களுடைய குடும்பத்தினரின் பதில் கூறியது.

கொலை நடைபெற்ற அன்று சாதாரண பொது மக்கள் ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் கொதித்தெழுந்தனர். அடுத்த நாள் கொலையைக் கண்டித்து ஆண்கள் சுலோகம் ஏந்தி காட்டுப்பள்ளி சந்தியிலிருந்து , பொலிஸ் நிலைஅயம் வரை ஆர்ப்பாடம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜாமியுல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாயலினுள் ஒரு கண்டனக் கூட்டமும் இடம்பெற்றது.

அப்போது “குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று அனுதாபமாகப் பேசியவர்கள் அத்தோடு மௌனியாகி விட்டார்கள்.

இத்னால் வெறுப்ப்டைந்த நான் யாரிடமும் போகவோ, உதவி கேட்கவோ விரும்பவில்லை. காரணம் எங்களுக்கு அரசியல் செல்வாக்கோ , பணபலமோ, பெரும்பதவி அதிகாரமோ இருக்கவில்லை.

நாட்டின் நிலைமை படுமோசமாகக் காணப்பட்டன. சட்டம், ஒழுங்கு, நீதி எல்லாமே பணத்திற்கும், பதவிக்கும் , அதிகாரங்களூக்கும் அடிமையாகிவிட்டன. அதனை சினிமாவிலும், நாடகங்களிலும், புட்டுப் புட்டு வைக்கிறார்கள் அதே நிலைதான் நிஜவாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

கொலைகாரர்களிடமிருந்தும், கொள்ளைக்காரர்களிடமிருந்தும் பொது மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் தலையாயக் கடமை அல்லவா? நீதி மன்றம் செல்ல வேண்டுமானால் அதற்கும் சட்டத்தரணிகளுக்கு பெருந்தொகைப் பணம் கொடுக்க வேண்டும். தீர்ப்புக் கிடைப்பதற்கு பல வருடங்களாகலாம். அதுவரை வழக்குப் பேசும் சட்டத்தரணிகளுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆனால் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் சட்டத்தின் துணை கொண்டு வாதத் திறமையால் குற்றவாளிகளைக் காப்பாற்றி விடுவித்து விட்டால் வழக்குப் பேசிய நிரபராதி நடு வீதியில் நிற்க வேண்டியதுதான்.

அப்போது சமூக விரோதிகளான குற்றவாளிகள் என்ன வழக்குப் போட்டு கிழித்து விட்டார்களா என மக்களிடம் பெருமையடித்து நிரபராதிகள் மீது சேறு பூசுவார்கள்.

ஜீவகாருண்யப் பெண்

எனது தங்கை சித்தி உஸைறா தான் வாழ்ந்த காலத்தில் பூனைகளுக்கும், ஆமை, அனில், காகம், நாய் போன்ற உயிரினங்களின் மீது கருணை கொண்டு அவற்றிற்கு உணவளிப்பார். அவர் அருந்தும் உணவில் அரைவாசிக்கும் மேல் அவைகளுக்கே போய்ச் சேரும். அது மட்டுமில்லாமல் அப்பிராணிகளும் தங்கையின் மீது மிகுந்த அன்பு செலுத்தின. அதனை நாங்கள் கண்ணாரக் கண்டிருக்கிறோம்.

அத்தோடு, சிறப்பாக சித்திரமும் வரைவார். கைப்பணியிலும் திறமை மிக்கவர். அவர் தயாரித்த வீடுகள் , பாடசாலைக் கட்டிடங்கள் போன்ற தயாரிப்புக்கள் கவர்ந்து பிரமிக்கவைத்தன.

மேலும், அவர் நிறையப் பொருட்களை வாங்கி சமையலறையோடு சேர்ந்த தமது அறைக்குள் வைத்திருந்ததோடு அவ்வறைக்குள் நான்கு பெரிய அலுமாரிகளும் , ஒரு சிறிய அலுமாரியும் இருந்ததை நாங்கள் அறிவோம். ஆனால், நாங்கள் யாரும் அவ்வறைக்குள் செல்வதில்லை. அவருடைய உடமைகள் அனைத்தும் அவ்வறைக்குள்ளேதான் இருக்கவேண்டும்.

பாறூக் ஆசிரியரினது கடந்த காலப் புகைப்படங்களும், கொலை செய்யப்பட்ட சகோதரி மற்றும் சகோதரியினது ஜனாஸா தொடர்பான புகைப்பட தொகுப்புக்கள்.

Related Posts