• ஜனாப்.எம்.எம்.ஸாலிஹ்
 • அல்ஹாஜ். ஸமது மௌலவி
 • ஜனாப். டீ.எல். மீராலெப்பை
 • ஜனாப். எஸ்.எச். அஹமது லெப்பை
 • ஜனாப். எம்.வை.எம். இப்ராஹிம் (யூவன்னா)
 • ஜனாப்.எம்.எச்.எம்.ஹலீம்
 • ஜனாப்.எம்.சீ.உசனார்
 • மௌலவி.கலாபூஷணம்.எம்.எம்.ஜமால்தீன் JP (மருதூர் ஜமால்தீன்)
 • ஜனாப். ஏ.சீ. அப்துல் றகுமான்
 • அல்ஹாஜ். கே.நௌசாத்
 • ஜனாப். எம்.ரி.எம். அன்ஸார்
 • ஜனாப்.எம்.எஸ்.அப்துல் கை
 • ஹாஜியானி நஸீரா எஸ். ஆப்தீன்
 • ஹாஜியானி ஜழீலா முஸம்மில்
 • ஏரூர் ஜிப்ரியா
 • ஷர்மிளா செய்யித்

ஜனாப். எம்.வை.எம். இப்ராஹிம் (கவிமணி – யூவன்னா)

ஏறாவூரின் இலக்கிய ஆளுமைகளுள் “ யூவன்னா” என எல்லோராலும் புகழப்படும் முஹம்மது யூசுப் – முஹம்மது இப்ராஹிம் என்பவர் 21.10.1954 இல் பிறந்தார்.

தன்னுடைய ஆரம்பக் கல்வியை  மட்/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தொடர்ந்த இவர் சாதாரண தரத்தை அலிகாரிலும் தொடர்ந்தார்.

1977.05.12 அன்று ஆசிரிய நியமனமும் கிடைக்கப் பெற்றார்.

1981 ஆம் ஆண்டு  அட்டாளைச்சேனை பயிற்சிக் கலாசாலையில் கணித ஆசிரியர் பயிற்சியையும் பெற்றார். இவரது ஆசிரியர் சேவையில் முதலாவது பாடசால மட்/ மீராகேணி அரசினர் முஸ்லிம் பாடசாலையாகும். பின்னர் ஓட்டமாவடி மகா வித்தியாலயத்திலும், அதனைத் தொடர்ந்து வ/தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் (முல்லைத்தீவு) பின்னர், அங்கிருந்து பொ/திவுலான முஸ்லிம் வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து மட்/ ஏறாவூர் றகுமானியா வித்தியாலயத்திலும் (10 வருடங்கள்) அதன் பின்னர் மட். மீராகேணி மகா வித்தியாலயத்திலும் 12 வருடங்கள்) அதன் பின்னர், ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலத்திலிருந்து 38 வருட கால 21.10.2014 இல் தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

1966 இல்  ஏ.அப்துல் றகுமான் (ஆன்பு மகன்), மர்ஹூம் தாஹா ஹஸன் ஆகியோருடன் சேர்ந்து “தாறயூம்” என்ற குழுப் பெயருடன் “செந்தேன்” கையெழுத்துப் பத்திரிகையினை ஆரம்பித்து நடாத்தினார்.

“செந்தேன்” கையெழுத்துப் பத்திரிகைத் தொடரில் , இளமையில் காலஞ்சென்ற மர்ஹூம் எம்.இஸ்மாயில் ஆசிரியர் அவர்களுக்கான

இரங்கல் இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.

“உலகம் சுழல்கிறது என்று படித்திருக்கிறேன்.
உன் மறைவுச் செய்தியை கேள்விப் பட்ட போதுதான் அதை அனுபவத்தில் உணர்ந்தேன்.” என்று தொடர்ந்தது அந்தக் கட்டுரை.

மட்/ றகுமானியா வித்தியாலயத்தில் கற்பித்த  காலத்தில் “றகுமானியா” என்ற  பத்திரிகையினை “றோனியோ” முறையில் அச்சிட்டு வெளியிட்டார்.

இலச்சினைகளை வரைவதிலும் , ஆக்கங்களை வரைவதிலும் ஆர்வம் கொண்ட இவர், ஏறாவூர் நகர சபையின் உத்தியோக பூர்வ இலட்சினையை வரைந்திருந்தார். இன்று வரைக்கும் அந்த இலட்சினையே நடை முறையில் உள்ளது.

அதே போல மட்/அல் முனீறா பாலிகா மகா வித்தியாலய இலட்சினையையும் இவறே வரைந்தவராவார்.

எழுத்துத் துறையிலே தீராத ஆர்வமுள்ள இவர்  நீண்ட காலமாக பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை எழுதி வருபவராவார். அந்த வகையில் மட்/ ஏறாவூர் றகுமானியா தேசிய பாடசாலயின் கீதத்தையும் இவரே எழுதியிருந்தார். அவ்வாறே மட்/ மாக்கான் மார்க்கார் தேசிய படசாலயின் கீதத்தினையும் இவரே வடிவமைத்தார்.

பல சிறுகதைகளையும் ,கவிதைகளையும் எழுதியுள்ள இவர், மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பல வெற்றிகளையும் பெற்றிருக்கிறார். இன்றும் இவரது கலை இலக்கியப் பணியை பாராட்டி ஏறாவூர் நகர பிரதேச செயலகம் “கலாச்சார பேரவை விருது” வழங்கி கௌரவித்து உள்ளது  என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மீராகேணி-ஏறாவூர் சமூக உறவு ஒன்றியத்தினால் 2014.05.17 அன்று சமூக நலப் பணிகளில் பங்குபற்றியவர்களைப் பாராட்டிய வைபவத்தில் ,இவரது சமூக நலப் பணிகளைப் பாராட்டி “கவிமணி” பட்டத்துடன் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்களினால் பொன்னாடை போர்த்தி, கௌரவிக்கப்பட்டார்.

கவிமணி – யூவன்னா அவர்களது பெற்றோரின் புகைப்படங்கள்.

கலாபூஷனம். எம்.எச்.ஏ.அப்துல் ஹலீம்

ஏர் வழமும் . சீர் நலமும் செழித்தோங்கும் ஏறாவூரில் எழுத்தான்மையால் ஏற்றம் கண்ட கவிஞர்கள் , இலக்கியவாதிகள் பலர் இருக்கின்றனர். அதில் குறிப்பாக மூத்த எழுத்தாளர்களின் பரப்பில் பூத்துப் புகழ்தாங்கி நிற்பவர் ஜனாப்.எம்.எச்.ஏ.அப்துல் ஹலீம் ஆவார். காத்திரமான கலை இலக்கியவாதியாக காலூன்றி நிற்கின்ற இவர் முஹம்மது ஹஸன் ஆலிம் அவர்களின் புதலவராக 1941ம் ஆண்டு முஹம்மது ஹஸன் ஆலிம் அவர்களுக்கு புதலவராகப் பிறந்தார்.

சிறந்த பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியரான இவர், அப்பழுக்கு இல்லாமல் இச்சமூகத்திற்கு குருத்துவப்பணியை மேற்கொண்டதோடு ஆன்மீக ரீதியாகவும் இச்ச்மூகத்தை சீர்செய்ய வேண்டும் என்று உழைத்தவருமாவார்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஆசிரியர்ப் பணியிலிருந்து ஓய்வடைந்த இவர், சிறு வயதில் தங்க்கிருந்த எழுத்தாற்றலை தனக்கு கிடைத்த இந்த ஓய்வான காலப்பகுதியில் சிறப்பாகப் பயன்படுத்தி தன்னை தேசிய அளவில் அடையாளப்படுத்திக் கொண்டார்.

நமது நாட்டிலிருந்து வெளிவருகின்ற தேசிய பத்திரிகைகளுக்கு கவிதைகள், சிறுகதைகள் என்று பல இலக்கிய வடிவங்களை எழுதி தன்னுடைய பெயரை ஆளமாக இலக்கியப் பரப்பில் பத்திதுக் கொண்டார். அது மாத்திரமல்லாது பிரதேச, மாவட்ட , மாகாண மட்டங்களில்  இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றி பல வெற்றிகளை எமது ஊருக்காக குவித்திருக்கிறார்.

மூத்த கவிஞர்களின் பரப்பில் மரபு வழியில் கவி படைக்கும் இவர் “சுவனத்து மலர்கள்” எனும் சிறுகதைத் தொகுதியையும், “பெண்ணியம்” “அடிமன அதிர்வுகள்” எனும் இரு கவிதைத்தொகுதிகளையும் வாசகர்களுக்கு வழங்கியதோடு இன்று வரைக்கும் ஓயாது இலக்கியப் பணி புரிகிறார்.

இவரது சிறப்பான இலக்கியப்பணியைப் பாராட்டி பல விருதுகள், பாராட்டுக்கள் கிடைத்திருந்தாலும் இலங்கை அரசு இவருக்கு வழங்கிய “கலாபூஷனம்” (2016) விருது அவருக்கு மாத்திரமல்லாது நமது ஊருக்கு கிடைத்தொரு வெற்றியுமாகும்.

மர்ஹூம் எம்.சி. உசனார் ஆசிரியர்

மர்ஹூம் எம்.சி. உசனார் ஆசிரியர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மாணவப்பருவதிலிருந்தே இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவராக விளங்கிய பல நாடகங்கலிலும் நடித்து பிரசித்தி பெற்றவர்.இவர் முற்போக்கு சிந்தனையும், புரட்சிகரமான கருத்துக்களையும் கொண்டவர்.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு ஏறாவூரிலிருந்து முதன் முதலாக சட்டத்துறைக்கு தெரிவான பெருமையும் இவரையே சாரும். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக சட்டக்கல்வியைத் தொடராது இடை நடுவிலே விட்டுவிடும்  நிலைக்கு ஆளானார். அதன் பின்னர் தனது ஆசிரியர்ப் பணியை ஏற்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் தமிழ் பாட ஆசிரியராகப் பணி புரிந்தார். சிறந்த கலை துறை பட்டதாரியான இவர், பாடசாலையின் கலைத் திட்டம் மட்டுமல்லாது புறகிருத்தியம் போன்றவற்றில் முன் நின்றவருமவார். 

புரட்சிக்கமால் எனும் முதுபெரும் கவிஞரின் நண்பரான இவர், தன்னை புடம் போடும் பயிற்சிப் பாசறையாக அந்த நட்பை ஆக்கிக் கொண்டார். அதனால் இவரின் சொல்லாட்சி, கவிதை நயம், என்பன புரட்சிக்கமாலை நினைவு கூரும் பிரதிமைகளாய் காணப்படுவது ஆச்சரியத்துக்குரியது அல்ல.

ஏறாவூரின் இலக்கிய வரலாறு, பாரம்பரியத்தை உடையது ஆயினும் அண்மைக்கால இலக்கிய அரும்புகளில் நினைவுகளில் நிறுத்தக்கூடிய சுட்டிக்காட்டவல்ல ஒரு இளம் அரும்பாக மர்ஹூம் எம்.சி. உசனார் ஆசிரியரை உலகம் இனம் கண்டிருந்தது. “முரசே நீ முழங்கு” எனும் இவரது கவிதைத் தொகுதி 2003  ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்னும் இவரது பல படைப்புக்கள் கிடப்பிலிருந்தும் காலம் அவருக்கு போதிய அவகாசத்தை வழங்கவில்லை.

27.08.2021 அன்று நம்மை விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்தார்.

மௌலவி.கலாபூஷணம்.எம்.எம்.ஜமால்தீன் JP (மருதூர் ஜமால்தீன்)

1960 இல் சாய்ந்தமருதில் அப்த்ர் ரஹ்மான் மீரா முஹைதீன் – இஸ்மாலெப்பை உம்மு குல்தூம் தம்பதியின் மகனாக பிறந்த மௌலவி.கலாபூஷணம்.எம்.எம்.ஜமால்தீன் JP (மருதூர் ஜமால்தீன்) அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியயை றியாழுள் ஜன்னா வித்தியாலயத்திலும் , உயர்தரக் கல்வியயை கல்முனை ஸாஹிறா கல்லூரியிலும் கற்ற இவர், பின்னர் தர்கா நகர் முஅய்யிதுல் அரபுக் கலாசாலையில் மார்க்கக் கல்வி பயின்று மௌலவி பட்டமும் பெற்றுக் கொண்டார்.

கிழக்கின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக திகழ்கின்ற அவர்கள் நான்கு தாசாப்தகளாக கடந்து இன்று வரை இலக்கியம் பணியைத் தொடர்கிறார். சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், திருமண உறவு மூலம் எமதூரை நீண்ட கால வசிப்பிடமாகவும் கொண்டு விளங்கும் இவர் இளமையிலேயே இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இன்றும் இலக்கிய கர்த்தாக்களின் வரிசையில் இடம்பிடித்தவராய் திகழ்கிறார்.

ஆரம்ப காலங்களில் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலிலும் கவிதைகள் , சிறுகதைகள், கட்டுரைகள், நாட்டார் பாடல்கள் என பல இலக்கிய வடிவங்களை தந்திருந்தாலும் கூட பிற்பட்ட காலங்களில் “ஸலவாத் மாலை”, “இஸ்லாமிய கீதம்”, “வெள்ளக் காவியம்” , “தாலாட்டு” என்று எழுதி இஸ்லாமிய இலக்கியத்திற்குள் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

சமூக அக்கறையோடு தன்னுடைய பேனா முனையை செலுத்துகின்ற மானுட நேயச் சிந்தனையாளராய் மருதூர் ஜமால்தீன் விளங்குவதோடு மரபு, புதிது, சிந்து, குறும்பா,கைக்கூ என்று கவிதையின் பல்வேறு வடிவங்களிலும் முயல்கின்றவராவார். நீண்ட காலமாக அல் ஹுதா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் , மருதம் , சிபா ஆகிய பத்திரிகைகளின் இணை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

அந்த வகையிலே இவரது தசாப்தங்கள் கடந்த இலக்கியப்பணியின் பெறுபேறாக அவரால் வெளியிடப்பட்ட நூல்களும், வெளியிடப்பட இருக்கின்ற நூல்களும், அவருக்கு கிடைக்கப் பெற்ற விருதுகளும்.

கிடைக்கப் பெற்ற விருதுகள்

 • 2013 – ஏறாவூர் பிரதேச செயலக கலை இலக்கிய விருது
 • 2013 – காவியப் பிரதீப் கவிச்சுடர் விருது
 • 2013 – இலங்கை தமிழ் எழுத்தாளர் வழங்கிய கலைவேந்தர் விருது
 • 2016 – ஸம்சுல் உம்மா விருது
 • 2016 – உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் வழங்கப்பட்ட கலைஞர் கௌரவம்
 • 2019 – மாவட்ட இலக்கிய விழாவில் வழங்கப்பட்ட கலைச்செம்மல் விருது
 • 2019 – ஏறாவூர் பிரதேச செயலக கலை இலக்கிய விருது
 • 2019 – கலைஞர் சுவதம் விருது
 • 2020 – ஹிஸ்புள்ளாஹ் பவுண்டேசன் வழங்கிய கலைத்தீபம் விருது
 • 2022 – அரச கலாபூஷணம் விருது

வெளியிடப்பட்ட நூல்கள்

 • 2010 – ரமழான் ஸலவாத்
 • 2010 – கிழக்கின் பெரு வெள்ளக் காவியம்
 • 2011 – முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புகழ் மாலை
 • 2012 – இஸ்லாமிய கீதங்கள்
 • 2015 – தாலாட்டு
 • 2015 – பத்று யுத்தம் (ஸலவாத் மாலை)
 • 2017 – வலிகள் சுமந்த தேசம்
 • 2018 – தீ நிலம்
 • 2019 – வல்லூரின் வானம்
 • 2019 – மனிதம் வாழும்
 • 2021 – விண்ணகப் பயணம் ( மிஹ்றாஜ் ஸலவாத் மாலை)
 • 2023 – கொரோனா குறுங்காவியம்)

வெளிவர இருப்பவை

 • அகந்தை அழிந்தது (உருவகக் கதைகள்)
 • நெறி தவறாதே (சிறுவர் பாடல்கள்)
 • ஓரு கிராமத்தின் குரல் ( நாட்டார் பாடலகள்)
 • வரிசை நபிகளார் வாழ்விலே

கவிஞர். ஏரூர். கே. நௌஷாத்.

ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட க. கமால்தீன் – பாயிதா தம்பதினரின் மூத்த புதல்வராக 1977.04.01 பிரந்த இவர். தனது பாடசாலைக் காலம் தொட்டே கவிதை எழுதத் தொடங்கியவர்.

கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரியான இவர் தற்பொழுது ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

பாடல்கள் , மேடைப் பேச்சு , விவாதம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்.

“நிவேதா” என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் ஏறாவூர் கலாச்சாரப் பேரவையின் உபதலைவராக மற்றும் மாவட்ட கலாச்சார பேரவையின் நடுவராகவும் செயற்படுகிறார்.

ஹாஜியானி நஸீறா எஸ். ஆப்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் நகரில் பெரிய ஆலிம் குடும்பம் என அழைக்கப்பட்ட முகம்மது ஹஸன் ஆலிம் என்பவரின் ஆண் வாரிசுகளில் இரண்டாமவரான செய்னுலாப்தீன் மற்றும் அலியார் ஆயிசா உம்மா ஆகியோரின் இரண்டாவது புத்திரியாக 1962 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் (அலிகார் மத்திய கல்லூரி) கற்றார்.

சுமார் 17 வருடங்கள் ஆசிரியராகவும் 20 வருடங்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமை புரிந்து 2018 ஆம் ஆண்டில் தனது 55 ஆவது வயதில் கடமையிலிருந்து ஓய்வு பெற்றார். தான் ஓய்வு பெற்ற பின்னரே இலக்கிய உலகிற்குள் காலடி வைத்த இவர் 2020 பெப்ரவரி முதலாம் திகதி தனது முதல் நூலான “ஹைக்கூவில் கரைவோமா? ” என்ற நூலை வெளியிட்டார்.

2020 தொடக்கம் 2022 வரையான காலப்பகுதிக்குள் இவர் ஐந்து(05) சொந்த நூல்களையும், இரண்டு உலகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள தனிப்பட்ட நூல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையானவை.

இவர் வெளியிட்டுள்ள நூல்கள்

 1. ஹைக்கூவில் கரைவோமா? (ஹைக்கூ பற்றிய ஆய்வும் மணிக்கூ அறிமுகமும்)
 2. வானும் மண்ணும் நம் வசமே.. (இலங்கையின் முதலாவது தன்முனைக் கவிதைகள்)
 3. பாரதிக்கு பதில் மடல் (புதுக் கவிதைகளும் கிராமியக் கவிதைகளும்)
 4. பெயர் பதிக்கும் தகைகள் (ஏறாவூர் தகைகளின் வரலாறு)
 5. மகுடம் சூடும் மணிக்கூகள் (மணிக்கூ கவிதைகள்)
 6. புத்தொளிக் கவிதைகள் (உலகக் கவிஞர்களின் புத்தொளிக் கவிதைகளும் கூம்புக் கவிதைகளும்)
 7. மண்ணில் தவழும் விண்மீன்கள் (உலகக் கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள்)

“புத்தொளி செயற்பாட்டுக் குழுமம்” என்ற அமைப்பினை நிறுவி அதனைத் தலைமை தாங்கி நடத்தி வருகின்றார். இக்குழுமத்தின் மூலம் முகநூலிலும் பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களிலும் பல்வேறு இலக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்வித் துறையில் பெற்றுக் கொண்ட விருதுகள்


சாமஸ்ரீ வித்யா ஜோதி விருது.
கல்விச் சுடர் விருது.

இலக்கியத் துறையில் பெற்றுக் கொண்ட விருதுகள்


மணிக்கூ கவி லிருது
கவி அலரி விருது
பேரறிஞர் அண்ணா விருது
கவிச் சாகரம் விருது
சந்தப்பாமணி விருது
கவி மின்னல் விருது
ஔவை விருது

இணையவழி பெற்ற விருதுகள்


இசைக் கவி விருது கவிமணி விருது
கனல் கவி விருது

2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம் வெளியிட்ட 1130 கவிதைகள் அடங்கிய உலக சாதனை நூலில் கவிதை பதிவிட்டு Universal Achievers Book of Record சான்றிதழையும் Future Kalams Book of Record சான்றிதழையும் பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில் அதே கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம் நடத்திய ஒரே மேடையில் 250 நூல்களை வெளியிட்ட உலக சாதனை நூல் வெளியீட்டு மேடையில் “மகுடம் சூடும் மணிக்கூகள்”, “மண்ணில் தவழும் விண்மீன்கள்” ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டு அவை INKZOID அமைப்பின் உலக சாதனையில் பதியப்பட்டுள்ளதுடன் அதற்காக RAABA Book of Record சான்றிதழையும் பெற்றுள்ளார்.

ஏரூர் கவிமாமணி எம்.ரி.எம்.அன்ஸார்

முகம்மதுத் தம்பி – சுலைஹா தம்பதிகளின் புதல்வரான எம்.ரி.எம்.அன்சார் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபா வித்தியாலத்திலும், உயர் கல்வியை ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியிலும் படிக்கும் போதே, கலைத்துறைக்குள் நுழைந்தவர்.

1986ம் ஆண்டு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான கவிதாசாகரம் நிகழ்ச்சியே இவரது கவிதையை ஒலிபரப்பாக்கி இவரை அறிமுகப்படுத்தியது, அதன்பின் இலங்கையில் வெளியாகும் நாளிதழ்களில் ஒன்றான வீரகேசரிப் பத்திரிகையும் இவரது கவிதைக்கு களம் அமைத்துக் கொடுதது.

அதனோடு இலங்கை, இந்தியா போன்ற முகநூல் குழுமங்களிலும் இவர் எழுதி தனது கவிதைகளுக்கு, விருதுகளும், வெற்றிச் சான்றுதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

 அதன் பிறகு தொடர்ந்து எழுத இவருக்கு ஊக்கமளித்த இவரது பெற்றோர்களும், கல்லூரி அதிபர் மர்ஹூம் யூ.எல்.தாவூது அவர்களும்,எனது தமிழ் ஆசிரியர் மர்ஹூம் ரீ.எல்.மீராலெப்வை ஆசிரியர் அவர்களும்,மற்றும் எனது உறவினர்களும், நண்பர்களும் வழங்கிய உற்சாகத்தின் உச்சமே ” தனது முதலாவது நூலான “மொட்டவிழும் மலர்கள்” எனும் தலைப்பில் வெளியான புதுக்கவிதை நூலாகும்.

அதனைத் தொடர்ந்து வெளியான  “பௌர்ணமி நிலவு “எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு மற்றும் “தென்றல் பாடும் தாலாட்டு

எனவே எனது மூன்றாவது புதுக்கவிதைத் தொகுப்பான ” எனும் நூலுமாகும்.

கவிதாயினி டொக்டர் ஜலீலா முஸம்மில்

ஏறாவூரின் இலக்கியப் பரப்பில் தற்கால சூழலில் தனக்கென்றதொரு தனித்துவ இடத்தை தக்கவைத்து வைத்து வருகின்ற பெண் இலக்கிய ஆளுமைகளில் முக்கியமான ஒருவரான டொக்டர் ஜலீலா முஸம்மில் அவர்கள் மர்ஹூம் யூ.எச்.முஹம்மத் (ஓய்வுபெற்ற அதிபர்) – சித்தி பௌசியா ஆகிய தம்பதியின் மூறாவது புதல்வியாக 1980 இல் பிறந்தார். இவர் தனது ஆர்மபக் கல்வியை மட்/ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் , மட்/அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

உயர் கல்வியை விஞ்ஞானப் பிரிவில் கல்முனை மஹ்மூத் பாலிகா மகா வித்தியாலயத்திலும் கற்று வைத்தியத் துறைக்குத் தெரிவானார். களனிப் பல்கலைகழகத்தில் தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்த இவர் இன்று 15 வருட கால அனுபவத்துடன் ஏறாவூர் ஆதார வைத்திய சாலையில் வைத்தியராகப் பணி புரிகிறார். இதற்கு முன்னர் தேசிய இரத்த பரிமாற்றுச் சேவையின் நான்கு வருட அனுபவத்தையும், மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நீண்ட கால அனுபவத்தைப் பெற்றிருக்கும் இவர் இன்று எழுத்துத் துறையில் தடம் பதித்து இருக்கிறார்.

விஞ்ஞானமும், இலக்கியமும் எட்டாத துறைகளாக இருந்தும் வைத்தியத்தோடு இலக்கியத்தை இவர் இணைத்திருக்கிறார் என்பது மிகையாகாது.

அண்மைக் காலமாக இவரது எழுத்தின் பரிணப்பும், வளர்ச்சியும் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், முகநூலிலும் காணக்கூடியதாக இருக்கிறது. சமூகச் சரிவுகளை சரியாக இணங்கண்டு கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் எழுதிவரும் இவர் தென்னிந்தியாவிலிருந்து பல விருதுகளை தனதாக்கிக் கொண்டிருக்கிறார். இன்றைய இணையத்தள ஆக்கிரமிப்பிற்குள் உலகம் ஆட்கொள்ளப்படும் நிலையில் இவரது படைப்புக்கள் இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு பல மின்னிதழ் களிலும், வலை உலாவிகளிலும் முக்கியத்துவம் பெற்று வருவதோடு கடந்த வருடம் இவரது வேகமான எழுத்துப் பணியின் விளைவாக “சிறகு முளைத்த மீன்” என்னும் கவிதைத்தொகுதியயும் வாசகர்களுக்கு வழங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts