ஒக்டோபர் 1ம் திகதி eEravur.lk இல் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ். பஷீர் சேகுதாவூத் அவர்களின் வரலாறு சம்பந்தமான பதிவொன்றை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதன் விளைவாக ஏறாவூர் வாவிக்கரைப் பூங்கா தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சிலரது கருத்துக்கள் விடயமாக எனது தேடலின் போது இதற்கு வித்திட்ட காரணகர்த்தாக்கள், நிதி மூலங்கள் மற்றும் இதனோடு இணைந்து முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல தகவல்கள்களும் கிடைக்கப்பெற்றது.

இத்தகவல்களை இவ்வலைத் தளத்தில் பகிர்கிறேன்.

இச்சிறுவர் பூங்கா அமையப்பெற்ற இடம் முதலில் ஊரில் சேரும் கழிவுகளைக் கொட்டும் குப்பை மேடாகவும், மடுவமும் அதனைச் சூழ கழிவுகள் நிறைந்து துர்நாற்றும் வீசும் ஒரு சாக்கடையாகவுமே காணப்பட்டது.

இம்மடுவத்தை அகற்றுமாறு வலியுறுத்தி அதற்கருகில் நெற்பயிற்ச் செய்கை மேற்கொண்டிருந்த மர்ஹூம் முஹம்மது JP ஹாஜியாரினால் வழக்குப் பதிவும் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே NEIAP (வடகிழக்கு நீர்ப்பாசன விவசாயத்திட்டம்) என்ற வெளிநாட்டு நன்கொடை உதவித்திட்டத்தின் கீழ் அப்போது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில்  திட்டமிடல் உதவிப் பணிப்பாளராக இருந்த அல்ஹாஜ்.எம்.ஐ.ஏ.வஹாப்தீன் அவர்களால் இந்நிதியுதவியைப் பெறுவதற்கான திட்ட முன்மொழிவு பிரதேச செயலகத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டு அப்போது பிரதேச சபை தவிசாளராக இருந்த ஜனாப். அப்துல் நாஸர் அவர்களின் ஒத்துழைப்புடன் ஆற்றோர அணைக்கட்டும் அதன் பக்கவாட்டில் கிரவல் பாதையும், தேவையான இடத்தில் மதகுகளும் இடப்பட்டு அபிவிருத்திசெய்யப்பட்டதுடன், மட்/ டாக்டர் அஹமட் பரீட் வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள பல நோக்குக் கட்டிடமும் இத்திட்டதின் கீழேயே நிர்மாணிக்கப்பட்டது.

இதன் பிற்பாடே இப்பிரதேசம் அழகு பெற்றதுடன், இப்பிரதேச காணிகளுக்கு திடீர் கேள்விகள் அதிகரித்து பெறுமதியும் கூடியது.

பிரதேச செயலகத்தை அவ்விடத்தில் அமைக்க முடியும் என்ற தீர்மானமும் அணைக்கட்டின் நிர்மாணத்தின் பின்னரே மேற்கொள்ளப்பட்டதாகும்.

இவ்விடத்தில் சுற்றுச் சூழலுக்கு பெரும் சவாலாக அமைந்திருந்த மாடறுக்கும் மடுவத்தை அங்கிருந்து அகற்றுவது அவசியம் என உணரப்பட்டு அவ்வாறு அகற்றுவதானால் அதற்கான மாற்று ஒழுங்கு செய்யப்படல் வேண்டும் என்பதனால் மடுவத்தை அங்கிருந்து மாற்றுவதற்கான பொருத்தமான காணி அடைடாளம் காண்ப்படுவதுடன் அதற்கான கட்டிடம், பாதை போன்றவை செய்துகொடுக்கப்படல் வேண்டும். இதனைக் கருத்திற்கொண்டு அப்போது கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த எம்.ஐ.எம்.வஹாப்தீன் அவர்கள் தனக்கு கிடைத்த வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அதற்கான காணி ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான  ஏற்பாட்டைச் செய்து அதற்கான கட்டிடம் மற்றும் பாதைகளை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்ததன் பிற்பாடே அம்மடுவத்தை இங்கிருந்து அகற்றி புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வது சாத்தியமானது.

ஆற்றோரமாக மிக நீளமாக அமைக்கப்பட்ட அணைக்கட்டுக்கும், ஆற்றுக்குமிடையில் இன்னுமொரு அணைக்கட்டைக் கட்டி அதனை மண்ணிட்டு நிரப்புவதன் மூலம் தற்போதுள்ள வடிவத்தில் இதனை அபிவிருத்தி செய்வதன் மூலம் ஊரின் பொதுவான பொழுதுபோக்கு மையம் ஒன்றை உருவாக்கலாம் என அப்போது பிரதி அமைச்சராக இருந்த கௌரவ பஷீர் சேகுதாவூத் அவர்களிடம் எம்.ஐ.ஏ.வஹாப்தீன் அவர்கள் எடுத்துரைத்த போது எவ்வித மறுப்புமின்றி அதன் அவசியத்தை உணர்ந்து தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உடனடியாக நிதி ஒதுக்கி மேற்கொண்டதன் விளைவாகவே வாவிக்கரைப் பூங்காவிற்கான கால்கோல் இடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பத்தில் பல அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களால் கட்டம் கட்டமாக இவ்வாவிக்கரைப் பூங்கா அபிவிருத்தி செய்யப்பட்டது.

மேலும், இத்தேடலின்போது மேலும் சில தகவல்கல் கிடைக்கப்பெற்றது.

ஊரின் பிரதான தேவைகளாகவும், பாடசாலைகளின் குறைபாடுகளையும், இடப் பிரசினைகளையும் தீர்த்து வைப்பதிலும்  எம்.ஐ.ஏ. வஹாப்தீன் அவர்களால் அதற்கான திட்ட முன்மொழிவுகள் அவ்வப்போது வெளிநாட்டு நன்கொடை திட்ட அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு  கீழ் குறிப்பிடப்படும் அபிவிருத்தித் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது

அந்த வகையில், ஆற்றுக்கு அண்மித்ததாக அமையப்பெற்றுள்ள மட்/மம/டாக்டர் அஹமத் பரீட் வித்தியாலயத்தின் இரண்டு மாடிக்கட்டிடம் அமையப்பெற்றுள்ள காணி அல்ஹாஜ். அபூசாலிஹ் அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இப்பாடசாலை அப்போது நடைபெற்ற இடம்  நெருக்கடி மிக்கதாகவும் மேலும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இடப் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி புதிய காணியில் இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்று அப்போது அதிபராக இருந்த அல்ஹாஜ்.ஏ.எம்.ஜுனைத்  அவர்களின் வேண்டுதலின் பேரில் அவரின் ஒத்துழைப்புடன் NECORD திட்டதின் கீழ் இன்று உள்ள இரண்டு  மாடிக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இப்பாடசாலைக்கு அருகே தமிழ் கிராமத்திற்கு எல்லையோரமாகவுள்ள சுரட்டையன் குடா என்று அழைக்கப்பட்ட (மீலாத் நகர்) பகுதி 1990 இல் இடம்பெற்ற வன்செயல் காரணமாக சேதமாக்கப்பட்டதோடு, அப்பகுதியில் வசித்த மக்கள் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்திருந்தனர். அவர்களை மீளக்குடியமர்த்துவற்காக அவர்களது சொந்தக் காணியிலேயே புதிதாகவும் அல்லது சேதமடைந்த வீடுகள் புணரமைக்கப்பட்டும் அங்கு வீதிகளுக்கான மின்சார இணைப்பு, உட்பிரவேச வீதிகள், மதகுகள் மற்றும் வடிகால்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதும் வாழ் வாதாரத்திற்கான சுயதொழில் உதவிகளும்  வழங்கப்பட்டது.

NEIAP திட்டத்தின் கீழேயே மிச்நகர் தாமரைக்கேணிக் குளத்தை அதன் ஆழ, அகலத்தை விரிவாக்கி சுலுசு இட்டு மழை காலத்தில் கிடைக்கப் பெறும் நீரை சேகரித்து அப்பகுதியில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் அக்குளம் புணரமைக்கப்பட்டதுடன் தக்வா நகர் கிராமம் மையக் கிராமமாக தெரிவுசெய்யப்பட்டு மக்களுக்கான வாழ்வாதாரத்திற்கான சுதொழில் முயற்சிக்கான  உதவிகள் வழங்கப்பட்டதும் அக்கிராமத்தின் பாதைகள் கிரவல் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதும் தேவையான இடத்தில் மதகுகளும், தக்வா நகரில் ஒரு பல நோக்குக் கட்டிடமும் நிர்மாணிக்கப்பட்டது. அத்தோடு மட்/ அஷ்ரப் வித்தியாலயத்திற்கு தளபாடமும் வழங்கப்பட்டது.

மேலும், எல்லைக் கிராமங்களாக அமையப்பெற்று வன்செயலின்போது இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளும் காளாச்சேனை என்றழைக்கப்பட்ட (றஹ்மத் நகர்) ,தக்வா நகர், கம்மின் குடா  என்றழைக்கப்பட்ட “ஹிதாயத் நகர்” மற்றும் ஐயங்கேணி (ஹிஜ்ரா நகர்) போன்ற எல்லைக் கிராமங்களில்  புதிதாக வீடுகளும்,பாதிக்கப்பட்ட வீடுகள் புணரமைக்கப்பட்டும், உட்பிரவேச வீதிகள் ,மதகுகள், மலசல கூடங்கள் மற்றும் மின்சார இணைப்புக்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் மதவழிபாட்டுத்தளமும் அமைக்கப்பட்டது. இது NORAD என்ற வெளிநாட்டு நன்கொடை உதவித்திட்டத்தின் கீழ் நிறை வேற்றப்பட்டது.

இதைத்தவிர, ஏறாவூர் பொது  வைத்தியசாலை ஆரம்பிகப்பட்ட காலத்தில் இருந்து சுற்று மதில் இன்றியே அதன் சுற்றுவட்டம் இருந்தது. வெளியார் அனுமதியின்றி உள்நுழைவதும், வைத்தியசாலையின் கழிவுகளை சூழவுள்ள வீட்டுக் காணிகளுக்குள்ளும் , கிணருகளுக்குள்ளும் நாய் மற்றும் காகங்களின் மூலம் இடப்படுவதால் ,சூழ உள்ள குடும்பங்கள் சொல்லொண்ணா சுகாதார சீர்கேடுகளை அனுபவித்து வந்தனர்.  இந்நீண்டகால சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்ய NECORD வெளிநாட்டு நிதி நங்கொடைத் திட்டத்தின் மூலம் சுற்றுமதில் அமைக்கப்பட்டதுடன் குடிநீர்ப் பிரச்சினைத் தீர்ப்பதற்காக தற்போதுள்ள நீர்த்தாங்கியும் அமைக்கப்பட்டது.

NORAD திட்டத்தின் கீழ் மட்/ அலிகார் தேசிய பாடசாலைக்கு அப்போது அதிபராக இருந்த அல்ஹாஜ் ULM.ஜெய்னுதீன் சேர் அவர்களின் வேண்டுதலின் பேரில் அப்போது பற்றாக் குறையாகவும் , தேவையாகவும் இருந்த  ஆசிரியர்களுக்கான கதிரை மற்றும் மேசைகளும் வழங்கப்பட்டது.

மட்/ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு சமூக ஆர்வலர் மர்ஹூம் வை.எம்.ஏ.காதர் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களினால் காணி நன்கொடை செய்யப்பட்டு அன்னாரது பெயரில் அமையப் பெற்றிருந்த பாடசாலை தற்காலிக ஓலைக் கொட்டிலிலேயே இயங்கி வந்தது. அப்போது அங்கு அதிபராக இருந்த ஜனாப்.எம். ஜவ்பர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக தற்போது அமையப் பெற்றுள்ள வகுப்பறைக் கட்டிடம் NORAD திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலமாக மட்/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை , மட்/மிச்நகர் இல்மா வித்தியாலயம் மற்றும் மட்/அலி ஸாஹிர் மௌலானா வித்தியாலயங்களுக்கும் வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டது.  

இத்துடன், புன்னக்குடா வீதியிலுள்ள கல்வி அபிவிருத்திச்சங்க கட்டிடமும் இதே திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.

மேற்குறித்த வேலைத்திட்டங்கள் யாவும் முழுக்க முழுக்க வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகும்.

எனவே, தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சிறப்பாகப் பயன்படுத்தி வெளிநாட்டு நிதி நன்கொடையாளர்களின் நிபந்தனைகள் , அளவுகோல்கள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் விதிகளை உள்வாங்கி நியாயப்படுத்து (Justification) முன்மொழிவுகளை முறையாக சமர்ப்பித்ததன் மூலம் பல பாடசாலைகளுக்கு அப்போதிருந்த இடப்பற்றாக் குறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன், ஊரின் பிரதானமானதும் நீண்ட காலத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு எல்லையோரக் கிராமங்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் மீளக்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டதுடன், எமது எல்லைகள் மீளப் பாதுகாக்கப்படக்கூடியதாகவும் இருந்தது.

அப்போதைய யுத்த சூழ்நிலை, வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் மாற்றாந்தாய் மனப்பான்மை போன்ற தடைகளுக்கு மத்தியில் பிடிங்கி எடுப்பது போல் செயற்பட்டதன் மூலம் ஒப்பீட்டளவில் எலும்புத் துண்டுகளையாவது பெறமுடிந்தது.

இந்தியா, தென்கொரியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் தமது தொழில் துறை பயிற்சிகாக சென்றுள்ள இவர் தற்பொழுது நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு  அபிவிருத்தி அமைச்சில் பணிப்பாளர் நாயகமாக உள்ள எம்.ஐ.ஏ.வஹாப்தீன் அவர்கள் ஏறாவூர் வரலாற்றில் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்.

முஹம்மத் பஸ்லுல்லாஹ்.

Post a comment

Your email address will not be published.

Related Posts